2010-03-24 15:04:30

நலச் சீர்திருத்தச் சட்டத்தின் வழி மக்களின் வரிப்பணம் கருக்கலைத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது - அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர்


மார்ச்24,2010 நலச் சீர்திருத்தச் சட்டம் அமெரிக்காவில் இன்னும் பலரை உள்ளடக்கியுள்ளது நல்லதொரு முடிவு என்றாலும், இந்த சட்டத்தால் மக்களின் வரிப்பணம் கருக்கலைத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவரும், சிகாகோ உயர் மறைமாவட்ட பேராயருமான கர்தினால் Francis George கூறினார்.
இச்செவ்வாயன்று மாலை அரசுத் தலைவர் பாரக் ஒபாமா கையெழுத்திட்டதால், இந்த நலச் சீர்திருத்தம் சட்டமாக வெளியான உடன், ஆயர் பேரவை சார்பாக கருத்துக்களை வெளியிட்டார் கர்தினால் George.
இந்தச் சட்டம் தற்போது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளபோதிலும், தொடர்ந்து இது குறித்த அரசியல் விவாதங்களை மேற்கொள்ளாமல், ஒழுக்க ரீதியான விவாதங்களை எடுத்து நடத்த திருச்சபை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்று கர்தினால் George கூறினார்.கடந்த சில மாதங்களாக இது குறித்த விவாதங்கள் நிகழ்ந்த போது, கத்தோலிக்கரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டிய கர்தினால் George, நாட்டில் உள்ள ஆறு கோடியே பத்து லட்சம் கத்தோலிக்கரையும் ஒரே எண்ணத்திற்கு உடன்பட வைப்பதென்பது முடியாத காரியம் என்றாலும், இந்த விவாதங்களால் கத்தோலிக்கத் திருச்சபையில் பிளவுகள் ஏற்படாமல் காப்பது ஆயர்களின் கடமை என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.