2010-03-24 14:38:17

திருத்தந்தையின் புதன் பொது மறை போதகம்.


மார்ச்24,2010 கோடைகாலத்திற்கு முன்னோடியான வசந்த காலம் துவங்கியுள்ள நிலையில் ரோம் நகரம் அதிக வெளிச்சத்துடனும் சாலையோர மரங்களின் பூக்களின் வரவேற்புடனும் அழகு சேர்த்துக் கொண்டிருக்க, திருத்தந்தையின் இவ்வார புதன் பொது மறைபோதகம் ரோம் நகர் புனித ராயப்பர் பசிலிக்காப் பேராலய வளாகத்தில் இடம் பெற்றது. அங்கு குழுமியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு புனித பெரிய ஆல்பர்ட் குறித்து தன் போதனைகளை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

RealAudioMP3 மத்தியக் காலத்தின் கிறிஸ்தவக் கலாச்சாரம் குறித்த நம் மறைக்கல்வி போதனையில் இன்று, பெரிய ஆல்பர்ட் என அழைக்கப்படும் புனித ஆல்பர்ட் குறித்து நோக்குவோம். உலக அளவில் பெரிய அறிவு மேதையாக அறியப்பட்ட இவரின் ஆர்வம் உலகு சார்ந்த அறிவியல் முதல் மெய்யியல், இறையியல் என பரந்து விரிந்ததாய் இருந்தது. தொமினிக்கன் துறவு சபையில் சேர்ந்த இவர், பாரீசில் தன் படிப்பை முடித்தபின் Cologneல் கல்வி கற்பிக்கும் பணியைத் துவக்கினார். Teutonic மாகாண சபை அதிபராக தேர்வுச் செய்யப்பட்ட பின், Regensburg ஆயராக நான்கு ஆண்டு காலம் பணியாற்றிய பின், கற்பிப்பதற்கும் எழுதுவதற்கும் என திரும்பினார். Lyons பொதுச்சங்கத்தில் முக்கியப் பங்காற்றி, தன் மாணவர்களுள் மிகவும் அறிவாளியான தாமஸ் அக்குவினாஸின் எழுத்துக்களையும் படிப்பினைகளையும் விளக்கி அதற்கு ஆதரவாகப் பேசினார். திருத்தந்தை 11ம் பத்திநாதரால் புனிதராகவும் திருச்சபையின் மறை வல்லுனராகவும் அறிவிக்கப்பட்டார் பெரிய ஆல்பர்ட். திருத்தந்தை 12ம் பத்திநாதரோ இவரை இவ்வுலகு சார்ந்த அறிவியல்களின் பாதுகாவலராக பிரகடனப்படுத்தினார். விசுவாசம் என்பது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல என்பதை நமுக்குக் காட்டுகிறார் இவர். இவ்வுலகப் படைப்பானது இறைவனால் எழுதப்பட்ட ஒரு புத்தகமாக நோக்கப்பட்டு, வெவ்வேறு அறிவியல்களால் அதனதன் வகையில் வாசிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட முடியும் என்பதை வெளிப்படுத்துகிறார் இப்புனிதர். அரிஸ்டாட்டில் குறித்த இப்புனிதரின் எழுத்துக்கள் மெய்யியல் மற்றும் இறையியல் எனும் அறிவியல்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் காட்டியது.

உண்மை மற்றும் மகிழ்ச்சிக்கான, அதாவது முடிவற்ற வாழ்வில் தன் நிறைவைக் காண்பதற்கான, அழைப்பை மீண்டும் கண்டுகொள்வதற்கு இவ்விரு அறிவியல்களும் ஒத்துழைக்கின்றன என்பதை வலியுறுத்தினார் புனித பெரிய ஆல்பர்ட்.

RealAudioMP3 இவ்வாறு புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.