2010-03-24 15:04:01

திருத்தந்தை அண்மையில் வெளியிட்ட கடிதம் பற்றி இந்திய தொடர்பு சாதனங்கள் தவறான பல வழிகளில் செய்திகள் வெளியிட்டுள்ளன - கர்தினால் Oswald Gracias


மார்ச்24,2010 சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து திருத்தந்தை அண்மையில் வெளியிட்ட கடிதம் பற்றி இந்திய தொடர்பு சாதனங்கள் தவறான பல வழிகளில் செய்திகள் வெளியிட்டுள்ளன என்று மும்பை பேராயர் கர்தினால் Oswald Gracias கூறியுள்ளார்.
செய்தித் தாள்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பயன்படுத்திய தலைப்புகள், விவாதங்கள் இவற்றிலிருந்து எடுத்துக்காட்டுக்களைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Gracias, தொடர்பு சாதனங்களின் பெரும்பான்மையான முயற்சிகள் மக்களுக்குத் தவறான கருத்துக்களைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது வருத்தத்திற்குரியது என்று கூறினார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கத்தோலிக்க எழுத்தாளர்களில் புகழ்பெற்ற Elizabeth Lev என்பவர் இதையொத்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
கத்தோலிக்கக் குருக்கள் மத்தியில் இந்த பாலியல் வன்முறைகள் குறித்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையானோர் என்றும், குருக்களில் பெரும்பான்மையினர் தங்கள் பணித்தளங்களில் இன்னும் புனிதமான, அமைதியான வாழ்வை மேற்கொண்டுள்ளனர் என்றும் கூறிய Elizabeth Lev, தொடர்பு சாதனங்கள் இந்த முறைகேட்டை மிகைப்படுத்திக் கூறியுள்ளதால், மக்களுக்கு பொதுவாக குருக்கள், திருச்சபை, மதம் போன்ற காரியங்களில் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதென கூறினார்.அமெரிக்காவில் மட்டும் மூன்று கோடியே 90 லட்சம் பேர் இந்த பாலியல் முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய Elizabeth Lev, இவர்களில் 60 விழுக்காட்டினர் குடும்பங்களில் இவ்வகை முறைகேட்டைச் சந்தித்தனர் என்றும், 2 விழுக்காட்டிற்கும் குறைவானோரே குருக்களால் இம்முறைகேட்டிற்கு ஆளாக்கப்பட்டனர் என்றும் எடுத்துக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.