2010-03-24 15:02:52

சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள் தாக்கப்படுவதும் உலகத்தின் அமைதிக்கு பெரிதும் ஆபத்தான ஒரு சூழல் - பேராயர் Silvano Tomasi


மார்ச்24,2010 மதங்கள் கேலிக்குரியவைகளாக மாறுவதும், மதம் சார்ந்த அடையாளங்கள், மதத் தலைவர்கள் மக்களிடையே மதிப்பை இழப்பதும், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள் தாக்கப்படுவதும் உலகத்தின் அமைதிக்கு பெரிதும் ஆபத்தான ஒரு சூழல் என்று பேராயர் Silvano Tomasi கூறினார்.
ஐ.நா.வின் மனித உரிமைகள் குழு ஜெனீவாவில் ஏற்பாடு செய்துள்ள 13வது அமர்வில், இச்செவ்வாயன்று உரையாற்றிய ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தர பார்வையாளர் பேராயர் Tomasi இவ்வாறு கூறினார்.
தனி மனிதர்கள் அவரவர் நம்பிக்கையுடன் மதங்களைப் பின்பற்ற ஒவ்வொரு நாடும் சுதந்திரம் அளிக்க வேண்டுமெனவும், பேச்சுரிமை என்பதைத் தவறான முறையில் பயன்படுத்தி மத உணர்வுகளைப் புண்படுத்தும் வண்ணம் பேசுவதைத் தடுக்கும் வகையில் சட்டச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் எனவும் பேராயர் தன் உரையில் வலியுறுத்தினார்.
மதங்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதிலும், திறந்த மனதுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதிலும் திருப்பீடம் பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளதென பேராயர் Tomasi கூறினார்.சிறுபான்மை மதங்களுக்கு எதிராக அண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் வன்முறைகளை அடக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சிகள் மேற்கொள்வதை திருப்பீடம் பெரிதும் விரும்புகிறது எனவும் ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தர பார்வையாளர் பேராயர் Tomasi கூறினார்.







All the contents on this site are copyrighted ©.