2010-03-24 15:02:38

இளையோர் திருமணத்தின் மாண்பையும், மதிப்பையும் அழகையும் கண்டுணர திருத்தந்தை அழைப்பு


மார்ச்24,2010 ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையேயான திருமண உறவு கடவுளின்பை சிறப்பான விதத்தில் வெளிப்படுத்துகின்றது என்று சொல்லி, இளையோர் திருமணத்தின் மாண்பையும், மதிப்பையும் அழகையும் கண்டுணர வேண்டுமென அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருமணம் என்ற திருவருட்சாதனம் மூலம் தம்பதியர் கடவுளோடு ஒன்றித்திருந்து தங்களது உறவில் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துகின்றார்கள் என்றும் பாப்பிறை கூறினார்.
திருமணம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கான ஒப்பந்தம் என்றும், அதை எளிதில் முறித்து விடலாம் என்றும், இன்றைய கலாச்சார சூழலில் பலர் கருதுகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, உண்மையான அன்பு பிரமாணிக்கமானது, அது தன்னையே கொடையாகக் கொடுப்பது என்றும் கிறிஸ்து, கிறிஸ்தவத் தம்பதியரை ஆசீர்வதித்து அவர்களோடு இருப்பதால் திருமணத்திற்கு விசுவாசமாக இருப்பது இயலக் கூடியது மட்டுமல்ல, பிறரன்பை வாழ்வதும் ஆகும் என்றார்.
உரோமைக்கு வெளியே Rocca di Papa என்ற ஊரில் இப்புதனன்று தொடங்கியுள்ள பத்தாவது சர்வதேச இளையோர் மாநாட்டில் கலந்து கொள்ளும் சுமார் 300 பிரதிநிதிகளுக்குச் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
“அன்பு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்” என்ற இந்த மாநாட்டின் தலைப்பு பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் என்ற முறையில் அன்பு செய்வதற்கு அவர்களுக்கு இருக்கும் அழைப்பையும் நினைவுபடுத்தினார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இளையோர் அவர்களையொத்த வயதுடைய மற்றவர்களுக்கும் இதில் கேட்ட அனைத்திற்கும் சாட்சிகளாக வாழுமாறும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.திருப்பீட பொதுநிலையினர் அவை நடத்தும் இந்த மாநாடு வருகிற ஞாயிறன்று நிறைவடையும். இந்தக் குருத்து ஞாயிறு 25வது உலக இளையோர் தினமாதலால் அதைமுன்னிட்டு இவ்வியாழனன்று உரோம் மற்றும் லாட்சியோ பகுதியின் சுமார் 70 ஆயிரம் இளையோரைத் திருத்தந்தை சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.