2010-03-22 15:29:07

இத்தவக்காலத்தில் பிறரைத் தீர்ப்பிடாமல் இருக்கத் திருத்தந்தை அழைப்பு


மார்ச்22,2010 இத்தவக்காலத்தில் பிறரைத் தீர்ப்பிடுவது குறித்து எச்சரித்த அதேவேளை, கிறிஸ்துவின் இரக்கம் மற்றும் மன்னிப்பு குறித்து அதிகமதிகமாக நாம் உணருமாறு இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கல்லால் எறிந்து கொல்லப்படும் தீர்ப்பிலிருந்து இயேசு காப்பாற்றிய விபசாரப் பெண் குறித்த நற்செய்தி பகுதி பற்றிய சிந்தனைகளை ஞாயிறு மூவேளை செப உரையில் வழங்கிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, பரிசேயர்கள், விபசாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டு வந்து அவரைப் பரிசோதிக்கும் முயற்சியில் ஈடுபட்டதை யோவான் நற்செய்தி 8ம் அதிகாரம் 1-11 வசனங்கள் விளக்கும் விதத்தை எடுத்துரைத்தார்.

நாடகம் போன்ற இந்த நிகழ்வில், அந்தப் பெண்ணின் வாழ்வும், இயேசுவின் சொந்த வாழ்வும் அவரின் வார்த்தைகளையே சார்ந்திருக்கின்றன, உண்மையில், இயேசுவைக் குற்றம் சாட்டி அவரைத் தீர்ப்பிட நினைத்தப் பரிசேயர்கள் இயேசுவிடம் அப்பெண் குறித்தத் தீர்ப்பை ஒப்படைக்கிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.

முழுவதும் அருளாலும் உண்மையாலும் நிறைந்த இயேசு, ஒவ்வொரு மனிதனின் இதயத்தையும் அறியும் இயேசு, பாவத்தைக் கண்டிக்கவும் அதேசமயம் பாவியைக் காப்பாற்றவும் பரிசேயத்தனத்தை வெளிப்படுத்தவும் விரும்புகிறார் என்று கூறினார் திருத்தந்தை.

உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இவள் மேல் கல்லெறியட்டும் என்று சொல்லி, இயேசு குனிந்து தரையில் தம் விரல்களால் எழுதத் தொடங்கியவுடன் பெண்ணைக் குற்றம் சாட்டியவர்கள் அங்கிருந்து போய்விட்டனர், இயேசுவும் அப்பெண்ணிடம் நானும் தீர்ப்பிடேன், இனி பாவம் செய்யாதே என்று சொல்லி அனுப்பினார்.

கடவுள் நமது வாழ்வையும் நன்மைத்தனத்தையும் மட்டுமே விரும்புகிறார் என்றுரைத்த திருத்தந்தை, அவர் தம் திருப்பணியாளர்கள் மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் மூலம் நமது ஆன்மாவுக்கான மீட்பை வழங்குகிறார், இதனால் யாரும் அழிந்து விடாதபடி, அதேவேளை எல்லாரும் மனம் மாறவும் இயலும் என்று கூறினார்.

அருட்பணியாளர்கள், புனித ஜான் மரிய வியான்னியின் ஒப்புரவு அருட்சாதனத் திருப்பணியைப் பின்பற்றி விசுவாசிகள் அந்த அருட்சாதனத்தின் பொருளையும் அழகையும் கண்டுணரவும் கடவுளின் இரக்கமுள்ள அன்பால் குணப்படுத்தப்படவும் உதவுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

எனவே அயலாரைத் தீர்ப்பிடாமல் இருக்கவும் நமது சொந்த பாவம் தொடங்கி அனைத்துப் பாவங்களை விலக்கி, பிறரை மன்னித்து வாழவும் விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.