2010-03-20 15:17:44

மார்ச் 21 - “இனவெறியை ஒழிப்பதற்கான உலக தினம்”


மார்ச்20,2010 அனைத்து விளையாட்டு நிறுவனங்களும் பாகுபாட்டுக்கெதிரான கடுமையான விதிமுறைகளைக் கடைபிடிக்குமாறும் இனப்பாகுபாட்டு நடவடிக்கையில் ஈடுபவர்களுக்குத் தக்க தண்டனைகளை வழங்குமாறும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.

“இனவெறியை ஒழிப்பதற்கான உலக தினம்” மார்ச் 21ம் தேதி, இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், இனவெறியால் பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

1960ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி தென்னாப்ரிக்காவின் Sharpeville இல் இனவெறியை எதிர்த்து அமைதியான போராட்டம் நடத்தியவர்களில் 69 பேர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அந்நாளை “இனவெறியை ஒழிப்பதற்கான உலக தினமாக” ஐ.நா.அறிவித்தது.

இவ்வாண்டு முதன்முறையாக ஓர் ஆப்ரிக்க நாட்டில், அதிலும் குறிப்பாக தென்னாப்ரிக்காவில் உலக கால்பந்து போட்டி நடைபெறவிருப்பதை முன்னிட்டு விளையாட்டு மைதானங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இனவெறிச் செயல்கள் இடம் பெறுவது தவிர்க்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி வலியுறுத்துகிறது.








All the contents on this site are copyrighted ©.