2010-03-20 15:29:50

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
வாழ்க்கையில் வரும் சவால்களைப் பல வழிகளில் சந்திக்கலாம். சவால்களைக் கண்டதும் ஓடி ஒளிந்துகொள்ளலாம். கோபத்தோடு அவைகளை எதிர்க்கலாம். அல்லது, நிதானமாய், ஆர அமர சிந்தித்து தெளிவான வகையில் அவைகளைத் தீர்க்கலாம். மன நல நிபுணர்கள் இன்னும் பல வழிகளைச் சொல்லித் தருவார்கள். நமக்கு இயேசு என்ன சொல்லித் தருகிறார் என்று பார்ப்போம். அவர் சவால்களைச் சந்தித்த விதம், சமாளித்த விதம் அழகானது.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர் இவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏன்? அவர்கள் இயேசுவை எப்படியும் மடக்கி, அடக்கி விடலாம் என்ற கற்பனையில் அவருக்கு விடுத்த சவால்கள் இயேசுவிடமிருந்து அற்புதமான சொற்களை, செயல்களை வெளிக் கொணர்ந்தன.
சென்ற ஞாயிறு சிந்தனையில் நாம் சிந்தித்த காணாமற் போன மகன் உவமை இப்படிப்பட்ட ஒரு சவாலுக்குப் பதிலாகச் சொல்லப்பட்ட கதை. “பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று பரிசேயர்கள் முணுமுணுத்தனர். அதுவும் இயேசுவின் காது படவே முணுமுணுத்திருக்க வேண்டும். அப்போது இயேசு சொன்னவை காணமற்போன ஆடு, காணமற்போன காசு, காணமற்போன மகன் என்ற அழகான மூன்று உவமைகள்.
இன்றைய ஞாயிறு சிந்தனைக்கு கொடுக்கப்பட்டுள்ள நற்செய்தியிலும் இயேசுவுக்குச் சவாலாக பரிசேயரும், மறைநூல் அறிஞரும் செயல் படுகின்றனர். இம்முறை இயேசு எதையும் போதிக்கவில்லை. மௌனம் காத்தார். ஓரிரு வரிகளே பேசினார். ஆனால், இயேசுவின் இந்த செயலே ஒரு அற்புதமான மறையுரையாகிறது அவர்களுக்கும், நமக்கும். இந்த நிகழ்வைக் கூறும் நற்செய்தி இதோ:

யோவான் நற்செய்தி 8:1-11 
வழக்கமாய் அதிகாலையில் நாம் மேற்கொள்ளும் பணிகள் எப்படிப்பட்டவை? மனதுக்கு அமைதியைத் தரும், நிறைவைத் தரும் செயல்கள். நம்மில் பலர் காலையில் எழுந்ததும் கோவிலுக்குப் போவது, யோகாசனம் செய்வது, அல்லது உடற்பயிற்சிக்காக நடப்பது, ஒரு கப் காப்பியை வைத்துக்கொண்டு செய்தித்தாளைப் படிப்பது .... இப்படி அமைதியான செயல்களிலேயே நாம் அதிகாலை வேளைகளைச் செலவழிப்போம். யாருமே காலை எழுந்ததும் மனத்தைக் கஷ்டப்படுத்தும், கோபப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதில்லை.
இயேசுவும் அப்படிதான். இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள் சொல்வது போல் அவர் ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் கோவிலுக்குத் திரும்பினார். எதற்காக? அங்கு மக்களுக்கு போதிக்க. இரவு முழுவதும் செபத்தில் தான் கண்ட அந்த நிறைவை, அமைதியை, நல்ல எண்ணங்களை மக்களோடு பகிர்ந்து கொள்ள அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.
இந்த அமைதியான, அற்புதமான பணியில் இயேசு ஈடுபட்டிருந்த போது, புயல் ஒன்று அவரை நெருங்கியது. மறை நூல் அறிஞர் பரிசேயர் வடிவில் வந்த புயல் அது. விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு வந்தது அந்த கும்பல்.
விடிந்ததும் ஒரு வழக்கை ஆரம்பிக்க இவர்கள் வந்திருந்தால், இரவு முழவதும் அவர்கள் சதித் திட்டத்தில் நேரத்தை வீணடித்திருக்க வேண்டும்.
இயேசுவை எப்படியும் மடக்க வேண்டும், அடக்க வேண்டும். இதுவே அவர்களது வாழ்க்கைப் பிரச்சனையாகப் போய்விட்டது. இதுவே அவர்களை இரவும் பகலும் ஆக்ரமித்த சிந்தனையாகி விட்டது. அவர்களது சதிக்கு பயன்படுத்திய பகடைக்காய் அந்தப் பெண்.
உடலளவில் அந்தப் பெண்ணை பயன்படுத்திவிட்டு ஒரு ஆண் ஓடிப்போயிருக்க வேண்டும். அவன் அங்கு இருந்ததாக நற்செய்தி சொல்லவில்லை. இப்போது பரிசேயரும், மறைநூல் அறிஞரும் சமூகத்திற்கு முன் அந்தப் பெண்ணைத் தரக்குறைவாகப் பயன்படுத்த இழுத்து வந்திருக்கிறார்கள். இது சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து.
இன்னொரு மனிதரை சொந்த நலனுக்காக பயன்படுத்துவதை விட பெரிய பாவம் உலகில் இல்லை. ஆம் அன்பர்களே, ஆழமாய் அலசிப் பார்த்தால், நாம் பாவங்கள் என்று பட்டியலிடும் பல செயல்களில் இறுதியில் இந்த ஒரு உண்மைதான் பின்னணியில் இருக்கும்... மற்றொரு மனிதப் பிறவியை நம் சுயநலத்திற்குப் பயன்படுத்துவது, பலியிடுவது.
பொருட்களைப் பயன்படுத்துகிறோம், பயன் தீர்ந்ததும் குப்பையில் எறிகிறோம். பொருட்களைப் பயன்படுத்துவதிலேயே நாம் கவனமாக இருக்க வேண்டும். தேவைக்கதிகமாய் பொருட்களைச் சேர்ப்பதும், பயன்படுத்துவதும் அதன் விளைவாக நம் சுற்றுச்சூழலை சீரழிப்பதும் அண்மைக் காலங்களில் பாவங்கள் என்று பேசப்பட்டு வருகிறதை நாம் அறிவோம்.
பொருட்களைப் பயன்படுத்துவதிலேயே இவ்வளவு கவனம் தேவை என்று சொல்லி வரும் போது, மனிதர்களைப் பயன்படுத்துவதில் எவ்வளவு கவனம் தேவைப்படுகிறது?... ஒரு நிமிடம்... மனிதர்களைப் பயன்படுத்துதல் என்ற வார்த்தைகளே அவலமான வார்த்தைகளாயிற்றே. மனிதர்களோடு பழகுவது, வாழ்வது என்பது தான் நாம் பயன்படுத்த வேண்டிய சொற்கள்... ஆனால், நாம் பார்க்கும் உலகில் பொருட்கள், பல சமயங்களில் மிருகங்கள் போற்றிப் பாதுகாக்கப் படுகின்றன. மனிதர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். செல்லப் பிராணிகளுடன் பழகுவது, வாழ்வது என்று நாம் மேற்கொள்ளும் பாடங்கள் என்ன பயிற்சிகள் என்ன... இவ்வளவு முன்னேறியுள்ள நாம், மனிதர்களை பொருட்களை விட, மிருகங்களை விட கீழ்த்தரமாக பயன்படுத்தி வருகிறோம் என்பதுதான் நம் சமுதாயம் இன்று இழைத்து வரும் பாவம். இதுதான் அன்று இயேசுவுக்கு முன் நடந்தது.

விபச்சாரத்தில் ஒரு பெண்ணைக் கையும் மெய்யுமாகப் பிடித்து வந்ததாகக் கூறுகின்றனர் பரிசேயரும் மறை நூல் அறிஞரும். இவர்கள் ஏன் இயேசுவிடம் வர வேண்டும்? இவர்களுக்குத் தான் சட்டங்களெல்லாம் தலைகீழாய்த் தெரியுமே! அந்தப் பெண்ணைத் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டே... பின் எதற்கு இந்த நாடகம்? அவர்களுக்கு, இயேசுவை எப்படியும் மடக்க வேண்டும். அதற்கு இது ஒரு சந்தர்ப்பம். அவ்வளவு தான். அந்த பெண்ணோ, சட்டங்களோகூட முக்கியமில்லை.
நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு நாடகம். அந்த நாடகத்தை எழுதியவர் இயேசுவை ஒரு புரட்சியாளராகவே அதிகம் காட்டினார். அந்த நாடகத்தில் இன்றைய நற்செய்தி கூறும் சம்பவம் ஒரு காட்சியாகக் காட்டப்பட்டது. இந்தக் காட்சியில் இயேசு ஒரு கேள்வி கேட்பார். "இந்தப் பெண்ணை விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடித்ததாகச் சொல்கிறீர்களே. அப்படியானால்... அந்த ஆண் எங்கே?" என்று கேட்பார். அவர்கள் மௌனமாகிப் போவார்கள். இயேசுவின் இந்தக் கேள்வி யோவான் நற்செய்தியில் கொடுக்கப்படவில்லை. உண்மைதான். ஆனால், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால், இயேசு இப்படி ஒரு கேள்வியைக் கட்டாயம் எண்ணிப் பார்த்திருப்பார். அதிலும் முக்கியமாக பரிசேயர்கள் மோசே கூறிய சட்டத்தை இயேசுவுக்கு நினைவுபடுத்திய போது, இக்கேள்வி கட்டாயம் அவருக்குள் எழுந்திருக்கும். மோசேயின் சட்டம் லேவியர் நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

லேவியர் 20: 10
அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும். 
மோசேயின் சட்டப்படி விபச்சாரத்தில் ஈடுபடும் இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க அந்த ஆணை அவர்கள் இழுத்து வந்ததாகக் கூறவில்லை. ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்ற அளவில் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் மோசே சட்டத்தை மாற்றி அமைத்து விட்டனர். அதிகாலையில், கோவில் வளாகத்தில் இப்படி ஒரு பெண்ணையும், மோசே சட்டத்தையும் பகடைக் காய்களாக்கிய பரிசேயரையும், மறைநூல் அறிஞர்களையும் வேதனையோடு நினைத்து, பரிதாபப்பட்டு, அவர்களோடு பேசாமல் இயேசு மௌனமாகிப்போனார். ஆனால், அவர்கள் விடுவதாயில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, அவர் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் சொன்னார். “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்”
இயேசுவுக்கு சவால் விட்டதாக நினைத்து வந்த பரிசேயருக்கும், மறைநூல் அறிஞருக்கும் இது பெரும் மரண அடி. முதியோர் தொடங்கி எல்லாரும் போக வேண்டியதாயிற்று. ஆண் வர்க்கத்திற்கு, சிறப்பாக பெண்களை வியாபாரப் பொருளாக, போகப் பொருளாக, அடிமைகளாக, பகடைக் காய்களாக நடத்தும் ஆண் வர்க்கத்திற்கு இயேசு கொடுக்கும் ஒரு சாட்டையடி இது... “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்”
இயேசு இந்த வாக்கியத்தைச் சொல்வதற்கு முன்னும் பின்னும் தரையில் எழுதிக் கொண்டிருந்தார் என்று நற்செய்தி கூறுகிறது. இயேசு அங்கு என்ன எழுதிக் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு சிலர் கொடுக்கும் விளக்கம் இது. அந்தப் பெண்ணை நோக்கி கல்லெறிய நினைத்த ஒவ்வொருவரின் பாவங்களையும் அவர் மண்ணில் எழுதினார் என்பது அந்த விளக்கம். இந்த விளக்கமே தேவையில்லை. இயேசுவைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் அந்த பரிசேயர்கள். எனவே அவரது நேர்மையான, தீர்மானமான அந்தக் கூற்றுக்குப் பதில் அவர்களிடம் இல்லை. அந்த இடத்தை விட்டு தப்பித்துக் கொள்கின்றனர். இறுதியாக, இயேசு அந்த பெண்ணை மன்னித்து அனுப்புகிறார்.

கருணையோடு நடந்த இந்த சம்பவம் ஆதித் திருச்சபையில் பல சங்கடங்களை விளைத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த சங்கடங்களால், இந்த சம்பவம் யோவான் நற்செய்தியிலிருந்து ஒரு சில நூற்றாண்டுகள் நீக்கப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆதித் திருச்சபையின் சங்கடம் தான் என்ன?
இயேசுவின் இப்படிப்பட்டக் கருணை பாவங்கள் பெருகுவதற்கு வழியாகி விடும் என்ற கண்ணோட்டம். இயேசுவின் இந்த மன்னிப்பை மேலோட்டமாகப் பார்த்தால், அவரது இரக்கத்தை எப்போதும் பெறலாம் என்ற துணிவில் மக்கள் இன்னும் அதிகம் பாவத்தில் விழக்கூடும் என்று எண்ணத் தோன்றும்.
இது தேவையற்ற, காரணமற்ற பயம். கடவுள் எந்த நிபந்தனையும் இன்றி அன்பு செய்பவர் என்பதை ஆணித்தரமாய் சொல்லத் தானே இயேசு உலகிற்கு வந்தார். அதைச் சொல்லத் தானே காணமற்போன மகன் உவமையைச் சொன்னார். அதே நிபந்தனையற்ற அன்புக்குச் செயல் வடிவம் கொடுத்தார் இயேசு இந்த மன்னிப்பின் மூலம். நீதியை விட, இரக்கத்தை விரும்பும் கடவுளைத் தான் விவிலியம், சிறப்பாக நற்செய்தி அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளது.
குற்றங்களைத் தண்டிக்கும் கடவுளோடு வாழ்வது எளிது. குற்றங்களுக்குத் தண்டனைகள் கிடைக்கும் என்று தெரிந்து, அந்த பயத்தில் குற்றம் புரியாமல் வாழ்வது சுதந்திரமான, முழுமையான வாழ்வு அல்ல. ஆனால், எந்த நேரமும் எந்த நிலையிலும் அன்பு ஒன்றையே வாரி வாரி வழங்கும் ஒரு கடவுளோடு வாழ்வது பெரிய சவால். அந்த அன்புள்ளத்தை துன்பப்படுத்தக் கூடாதென்று நல்வழியில் வாழ முயல்வது தான் சுதந்திரமான, முழுமையான வாழ்வு. இந்த வாழ்வைத் தான் கடவுள் விரும்புகிறார். இயேசுவும் விரும்புகிறார்.
திரும்பி வந்த அந்த காணாமற் போன மகனை நினைத்துப் பாருங்கள். அவனுக்குக் கிடைத்த அந்த வரவேற்பிற்குப் பின், தன்னை வாரி அணைத்து, விருந்து கொடுத்து ஏற்றுக் கொண்ட அந்த தந்தையின் மனதை இனி அந்த மகனால் துன்பப்படுத்த முடியுமா? முடியும். ஆனால், மாட்டான். அன்பைச் சுவைத்தவன், இனி அந்த அன்புக்கு பதிலாக, நல்வழி செல்வதையே தினமும் நினைத்திருப்பான்.
இயேசுவும் அந்த பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கிய போது, "இனி பாவம் செய்யாதே." என்று சொல்லி அனுப்புகிறார். அதை அவர் சொல்ல வில்லை என்றாலும், இப்படி ஒரு சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பெண் முற்றிலும் மாறிய ஒரு வாழ்வை ஆரம்பித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
நிபந்தனையற்ற அன்பு நம் வாழ்வில் ஆற்றக் கூடிய புதுமைகள் சொல்லித் தெரிவதில்லை, உணர்ந்து பார்க்க வேண்டியவை. இறைவனின் நிபந்தனையற்ற அன்பை வாழ்ந்து பார்க்க முயல்வோம்.







All the contents on this site are copyrighted ©.