குருத்துவத்தின் மகத்துவத்தை வெளிக்கொணர்ந்து குருக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு
ஆயர்கள் ஆவன செய்யுமாறு திருத்தந்தை வலியுறுத்தல்
மார்ச்20,2010 புர்க்கினா ஃபாசோ மற்றும் நைஜர் நாடுகளில் உண்மையான முன்னேற்றத்திற்குத்
தடையாய் இருக்கின்ற தீமைகளைக் களைவதற்கு அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை எடுத்து
வரும் முயற்சிகளைப் பாராட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அந்நாடுகளில் அனைவருக்கும்,
குறிப்பாக கடும் வறுமையில் வாழ்வோருக்கு, இன்னும் குறிப்பாகக் கடந்த செப்டம்பரில் கடும்
வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தலத்திருச்சபை ஆற்றும் பணிகளை ஊக்கப்படுத்தினார்
திருத்தந்தை.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் “அட்
லிமினா” சந்திப்பை முன்னிட்டு புர்க்கினா ஃபாசோ மற்றும் நைஜர் நாடுகளின் ஆயர்களை இச்சனிக்கிழமை
வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இச்சர்வதேச
அருட்பணியாளர்கள் ஆண்டில், குருத்துவத்தின் மகத்துவத்தை வெளிக்கொணர்ந்து குருக்களின்
வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு ஆயர்கள் ஆவன செய்யுமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
பொதுநிலை
விசுவாசிகள், விசுவாசத்தில் ஆழப்படவும், குறிப்பாக அரசியலிலும் அறிவுத்துறைகளிலும் ஈடுபட்டுள்ளவர்கள்
கிறிஸ்தவக் கோட்பாடுகளின்படி செயல்படுவதிலும் ஆயர்கள் கவனம் செலுத்த வேண்டுமெனப் பரிந்துரைத்தார்
திருத்தந்தை.