2010-03-20 15:14:39

அயர்லாந்தில் குருக்களால் செய்யப்பட்ட தவறான பாலியல் நடவடிக்கைகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் திருத்தந்தை


மார்ச்20,2010 அயர்லாந்து நாட்டில் கத்தோலிக்க குருக்களால் செய்யப்பட்ட தவறான பாலியல் நடவடிக்கைகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இச்சனிக்கிழமையன்று அயர்லாந்து கத்தோலிக்கருக்கென மேய்ப்புப்பணி கடிதம் எழுதியுள்ள திருத்தந்தை, குருக்களின் இச்செயல்கள் வெட்கத்துக்குரியவை மற்றும் வெறுக்கத்தக்கவை என்று குறிப்பிட்டுள்ளார்.

குருக்களின் இச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் திருச்சபையில் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்ததை ஏற்றுக் கொண்டுள்ள திருத்தந்தை, இக்குற்றச்சாட்டுகள் குறித்த புகார்களை ஆயர்கள் கையாண்ட விதங்களிலும் கடும் தவறுகள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அயர்லாந்தில், குருக்களின் இச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள், சிறாரைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திய குருக்கள் மற்றும் துறவிகள், அயர்லாந்து குருக்கள் மற்றும் துறவிகள், ஆயர்கள் இன்னும் அயர்லாந்தின் அனைத்து விசுவாசிகள் என ஒவ்வொரு குழுவையும் குறிப்பிட்டு அவர்களுக்கென செய்தி வழங்கியுள்ளார் திருத்தந்தை.

குருக்களின் தவறானப் பாலியல் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கென எழுதியுள்ள திருத்தந்தை, நீங்கள் மிகவும் கடுமையாய்த் துன்புற்றுள்ளீர்கள், இதற்கு நான் உண்மையிலேயே மன்னிப்புக் கேட்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் செய்த குருகுலத்தார் இறைவன் முன்னிலையில் பதில் சொல்ல வேண்டும் என்றும் அயர்லாந்து திருச்சபை குணப்படுத்தல், பரிகாரம் மற்றும் புதுப்பித்தல் செயல்களில் தன்னை உட்படுத்துமாறு அழைப்பு விடுத்தார் அவர்.

ஒரு வருடத்திற்கு, அதாவது இந்தத் தவக்காலத்திலிருந்து 2011ம் ஆண்டு இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா வரை வெள்ளிக்கிழமைகளைத் தபம், செபம், திருநற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம் ஆகியவற்றில் செலவழித்து பரிகாரம் செய்யுமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

அயர்லாந்து திருச்சபையில் அப்போஸ்தலிக்க மேற்பார்வை இடம் பெறும் எனவும் அறிவித்தார் திருத்தந்தை








All the contents on this site are copyrighted ©.