2010-03-18 15:22:57

ரோமை தொழிற்தலைவர்களுக்கான திருத்தந்தையின் உரை 


மார்ச்18,2010 மனித மாண்பை மதிப்பதை மையம் கொண்டதாய் சமூகத்தின் பொருளாதார, நிதி நிலைகள் செயல்பட வேண்டும் என உரோம் நகரின் தொழிற்தலைவர்களைச் சந்தித்தபோது மீண்டும் நினைவூட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இன்றைய சமூகம் ஒழுக்க மற்றும் ஆன்மீக விடயங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட பொருட்களுக்கும் தொழில்நுட்பத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் அதிகம் என ஏற்கனவே தான் Caritas in Veritate என்ற சுற்றுமடலில் குறிப்பிட்டுள்ளதை தொழிற்தலைவர்களிடம் எடுத்தியம்பிய திருத்தந்தை, இன்றய வேலைவாய்ப்பின்மைகள், தொழிலாளர்களின் போதிய வருமானமின்மை, புது வகையான அடிமை முறைகள் போன்றவை நியாயமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டிய தேவையை வலியுறுத்துகின்றன என்றார்.
ஆய்வுகளிலும் புது கண்டுபிடிப்புகளிலும் முதலீடு செய்தல், நிறுவனங்களிடையே அநீதியான போட்டிகளைத் தவிர்த்தல், பொருட்களின் தரத்தை உறுதிச் செய்தல் என்பவையே ஒரு நிறுவனத்தின் உண்மையான வெற்றியாக இருக்கமுடியும் எனவும் கூறினார் திருத்தந்தை.இத்தாலியின் பல நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, நல்லுறவு, நம்பிக்கை போன்றவை நிறுவனங்களின் வெற்றிக்கான காரணங்களாக இருந்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இறைவனின் ஒரே குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்களே நாம் அனைவரும் என்பதை உறுதியாக நம்பி, கடவுளிலும், அன்பிலும், சகோதரத்துவ உணர்விலும், வரவேற்கும் பண்பு, நீதி, அமைதி ஆகியவற்றிலும் நம்பிக்கைக் கொண்டு வாழும்போது வெற்றி உறுதியே என தொழிற்தலைவர்களிடம் மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.