2010-03-18 15:23:28

கர்தினால் John Henry Newmanஐ முத்திபேறு பெற்றவராக உயர்த்தும் திருச்சடங்கை திருத்தந்தை முன்னின்று நடத்துவார் 


மார்ச்18,2010 வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நான்கு நாள் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்கு கர்தினால் John Henry Newmanஐ முத்திபேறு பெற்றவராக உயர்த்தும் திருச்சடங்கை முன்னின்று நடத்துவார் என்று இங்கிலாந்தின் கத்தோலிக்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
கலாச்சாரம், கவிதை மற்றும் அருட்பணி என்று பல கோணங்களிலும் சிறந்தவராய் விளங்கிய கர்தினால் Newman கடந்த 200 ஆண்டுகளாக ஆங்கிலேய வரலாற்றில் தனியொரு இடம் பிடித்துள்ளார் என்றும், அவர் எழுதிய கருத்துக்கள் பல திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டின் சிந்தனைகளைத் தூண்டியுள்ளதெனவும் இங்கிலாந்து ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Vincent Nichols செய்தியாளர்களிடம் கூறினார்.
முத்திபேறுபெற்றவர் எனும் தகுதிக்கு ஒருவரை உயர்த்துவதை தலத்திருச்சபையின் கர்தினால்கள் நடத்த வேண்டும் என்று திருத்தந்தை ஏற்படுத்திய வழிமுறைக்கு ஒரு விதிவிலக்காக அவரே இந்தத் திருச்சடங்கை இங்கிலாந்தில் மேற்கொள்வது, கர்தினால் Newman பேரில் அவருக்குள்ள ஆழ்ந்த மதிப்பைக் காட்டுகிறதென பேராயர் Nichols மேலும் கூறினார்.
இந்த திருச்சடங்கு கர்தினால் Newman வாழ்ந்த Birmingham உயர் மறைமாவட்டத்தில் நடைபெறும் என்று செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.1801ஆம் ஆண்டு Anglican சபையைச் சார்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த கர்தினால் Newman, தனது 24வது வயதில் Anglican குருவாகி, பின்னர் தனது  44வது வயதில் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தார் என்பதும், அங்கு அவரது 78ஆம் வயதில் கர்தினாலாக உயர்த்தப்பட்டு, 89ஆம் வயதில் இறையடி சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.