2010-03-18 15:24:03

கத்தோலிக்கக் கோவில்கள் கட்டப்படுவதைத் அனைத்து சமயத்தினரும் வரவேற்கின்றனர் - ஆப்ரிக்க ஆயர்


மார்ச்18,2010 கத்தோலிக்கக் கோவில் ஒன்று கட்டப்பட்டால், அத்துடன் வரும் பல பயன்களை அனைவரும் அடைவதால், கோவில்கள் கட்டப்படுவதைத் தன் நாட்டில் அனைத்து சமயத்தினரும் வரவேற்கின்றனர் என்று ஆப்ரிக்க ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை திருத்தந்தையுடன் நடைபெறும் Ad Limina சந்திப்பில் கலந்துகொள்ள வந்திருக்கும் Burkina Faso ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Seraphin Francois Rouamba இவ்வாறு கூறினார்.
 தங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்களுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், கத்தோலிக்கருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் உறவு உறுதியாக இருப்பதாகவும் கத்தோலிக்கக் கோவில்கள் கட்டப்படும் போது, அத்துடன் கல்வி, மருத்துவப் பணி ஆகிய பிற அமைப்புகளும் சேர்ந்து வருவதால், இக்கோவில்கள் எழுப்பப்படுவதில் பலரும் ஆர்வமாய் இருக்கின்றனர் என்றும் பேராயர் Rouamba கூறினார்.
 மறைமாவட்ட மேய்ப்புப்பணி சார்ந்த பயணங்களை மேற்கொள்கையில், முஸ்லிம்களும், மற்ற கிறிஸ்துவ சபையினரும் தங்களைச் சந்திக்க வருகின்றனர் என்று கூறிய பேராயர் Rouamba, ஒரு சில இடங்களில் கோவில்கள் எழுப்பப்படுவதற்கும், பங்குகள் அமைக்கப் படுவதற்கும் முஸ்லிம் செல்வந்தர்கள் நிதி உதவிகள் செய்ய முன் வந்துள்ளனர் என்று கூறினார். ரோமையில் சென்ற ஆண்டு நடந்த ஆப்ரிக்க ஆயர்களுக்கான மாமன்றத்திற்கு ‘நீதியும் அமைதியும்’ என்ற மையக் கருத்தை திருத்தந்தை தேர்ந்தது சிறப்பான ஒரு முடிவு என்றுரைத்த பேராயர் Rouamba, இந்தப் பணியே இப்போது ஆப்ரிக்க நாடுகளில் திருச்சபை சந்திக்கும் பெரும் சவால் என்று எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.