2010-03-17 15:48:38

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்.


மார்ச் . 17. பல நாட்களான குளிர் மற்றும் மழைக்குப் பின் இவ்வாரத்தில் ரோம் நகரை நோக்கி சூரியன் தன் பார்வையைத் திருப்பியுள்ளான். இப்புதனன்று சூரிய ஒளியாலும், மிதமான வெப்பத்தாலும், எண்ணற்ற விசுவாசிகளாலும் ரோம் நகர் புனித ராயப்பர் பசிலிக்கா பேராலய வளாகம் நிரம்பியிருக்க, மத்தியக்கால கிறிஸ்தவக் கலாச்சாரம் குறித்த தன் மறைபோதனைகளைத் தொடர்ந்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.RealAudioMP3 புனித பொனவந்தூர் குறித்தே நாம் இன்று மீண்டும் நோக்குவோம். புனித தாமஸ் அக்வினாஸின் சம காலத்தவர் புனித பொனவந்தூர். இவ்விரு மிகப்பெரும் இறையியலாளர்களும் 13ம் நூற்றாண்டு இறையியலின் வளம் மிகு பன்மைத்தன்மைக் குறித்து நமக்கு வெளிப்படுத்துகின்றனர். கடவுளை நாம் அறிவதற்குத் தொடர்புடைய கோட்பாட்டியலான அறிவியலாக இறையியலை நோக்கினார் புனித தாமஸ். மாறாக, புனித பொனவெந்தூரோ அதனை நாம் கடவுளை அன்புச் செய்வதற்கும் நம் விருப்பத்தை அவர் விருப்பத்திற்கு உடன் பட்டதாகக் கொண்டு வருவதற்கும் உதவும் ஞானத்தோடு தொடர்புடைய நடைமுறைக்குரியதாகக் கண்டார். உண்மையைக் குறித்த புனித தாமஸின் வலியுறுத்தல்கள், அன்பைக் குறித்த புனித பொனவெந்தூரின் வலியுறுத்தகல்களுக்கு பலம் சேர்ப்பவைகளாகவே உள்ளன. பிரான்சிஸ்கன் துறவுச் சபையைச் சேர்ந்தவர் என்ற முறையில் புனித பொனவந்தூர், புனித பிரான்சிஸ் அசிசியின் வாழ்வில் உடலோடு ஒன்றித்ததாகக் காணப்பட்ட அன்பின் முதன்மைத்துவம் குறித்து ஆழமாக சிந்திக்கத் துணிகிறார். கடவுளை நோக்கிய ஒன்றிப்புக்கு படைப்புகளை இட்டுச்செல்ல படிகளாக செயல்படும் வானக படிநிலைகளை வலியுறுத்தும் ஸூடோ டயோனிசிஸின் இறையியலாலும் வெகு அளவில் கவரப்பட்டவர் புனித பெனவந்தூர். மனது இறைவனை நோக்கி மேலெழுந்துச் செல்லும்போது பகுத்தறிவு வாதம் அங்கு செயல்படுவதில்லை, அன்பே தெய்வீக மறையுண்மையில் நுழைகிறது என்ற பொனவெந்தூரின் தியானங்களுக்கு தூண்டுகோலாக இருந்தார் ஸூடோ டயோனிசிஸ். ஜெபத்தின் மீது அதிக நம்பிக்கைக் கொண்டு அதைச் சார்ந்திருந்த புனித பொனவந்தூர், இப்படைப்புகளைக் குறித்த தியானத்திலிருந்து நம் இதயத்தையும் மனதையும் மேலெழுப்பி இறைவனின் முடிவற்ற அன்பில் இளைப்பாறுமாறு நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

RealAudioMP3 இவ்வாறு தன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அயர்லாந்தின் பாதுகாவலர் புனித பேட்ரிக்கின் திருவிழாவை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை வெளியிட்டதோடு, அயர்லாந்து தலத்திருச்சபைக்கென தான் தயாரித்துள்ள சிறப்பு மேய்ப்புப் பணிச் சுற்றறிக்கைக் குறித்தும் எடுத்துரைத்தார். அயர்லாந்து திருச்சபையில் எழுந்துள்ள பாலர் மீதான பாலின நடவடிக்கைகள் குறித்து தலத்திருச்சபை வெகு அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்கள். இத்துன்ப சூழல் குறித்த ஆழ்ந்த கவலையின் அடையாளமாக தயாரிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை இவ்வெள்ளியன்று அதாவது புனித வளன் திருவிழா அன்று கையெழுத்திட்டு அனுப்ப உள்ளேன், அதனை திறந்த மனதோடும் விசுவாச உணர்வோடும் வாசியுங்கள். இக்கடிதம் அல்லது சுற்றுமடல் மனம் வருந்தல், குணப்படுத்தல் மற்றும் புதுப்பித்தலில் உதவும் என நம்புகிறேன் என மேலும் கூறிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.