2010-03-15 15:16:02

வாரம் ஓர் அலசல்- அனைத்து உயிரினப் பாதுகாப்பு ஆண்டு 2010


மார்ச்15,2010 “பூமியை பரிசோதிக்க மனம்கொண்ட கடவுள், ஒரு மழையை பெய்துவிட்டு பின்னாலேயே தேவதைகளை அனுப்பிவைத்தார். தட்டான்களின் வாலில் கல்லைக்கட்டியும், நீண்ட நூல்களை கட்டியும் கல்சுமக்க வைத்தும், சிறகுகளை துண்டித்து பறக்கவிட்டும், இரண்டு தட்டான்களை ஒரு நூலால் இணைத்தும், அவை திண்டாடுவதை ரசித்துக் கொண்டிருந்தனர் மனிதக்குழந்தைகள். கடவுளும் தேவதைகளின் தலைவனும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் ஆழ்ந்தகவலையுடன்!”
இதனை வாசித்த போது, கிராமத்தில் சிறுவயதில் தட்டான்களைப் பிடித்து விளையாடியதும், சிறுவர்கள் கழுதை வாலில் ஓலையைக் கட்டி தீ பற்றவைத்து விளையாடியதும் நினைவுக்கு வந்தன. இம்மாதிரி உயிர்களை சித்ரவதை செய்யும் சில விளையாட்டுகள் அறியாமல் செய்யப்படுகின்றன. ஆனால் இன்று உலகில் பணம்படைத்த மற்றும் அறிவாளி மனிதர் பலரின் சுயநலங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன, அதனால் அங்கு வாழும் பலஉயிரினங்கள், ஊர்வன, பறப்பன, நீந்துவன என பல உயிரின வகைகள் அழிந்து விட்டன. இன்னும் பல அழியும் ஆபத்தை எதிர்நோக்குகின்றன. “இந்த உயிரினங்கள் மனித சமுதாயத்தின் வாழ்வு” என்று சொன்னார் ஐக்கிய நாடுகள் நிறுவனப் பொதுச் செயலர் பான் கி மூன்.

உயிரினங்கள் அழிக்கப்படுவதால் பாதிக்கப்படுவது மனித சமுதாயமும் சுற்றுச் சூழலுமே. ஏனென்றால், தாவரம், விலங்கு என அனைத்து உயிரினங்களிலும் கார்பன் உள்ளது. எடுத்துக்காட்டுக்கு, ஒரு வீட்டின் முன்னர் ஒரு வேப்ப மரம் இருப்பது, ஒரு மருத்துவர் வீட்டிலேயே இருப்பதற்குச் சமமாகும். புங்கன் மரம் சுத்தமான ஆக்ஸிஜனைத் தரக்கூடியதாகும். திமிங்கிலத்தை எடுத்துக் கொண்டால் அதன் பெரிய உடலில் பெருமளவான கார்பன் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே இது கொல்லப்படும் பொழுது பெருமளவான கார்பன் வெளியேற்றப்படுகிறது. உலகில் நூறு ஆண்டுகளில் இடம் பெற்ற திமிங்கில வேட்டையில், 1,30,000 சதுர கிலோ மீட்டர் அளவிலான காடுகளை எரிப்பதால் வெளியேறும் வெப்பநிலைக்குச் சமமான கார்பன் வெளியேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு டாக்டர் Andrew Pershing, அமெரிக்க ஐக்கிய நாட்டு Portland இல் நடைபெற்ற “பெருங்கடல்கள் அறிவியல்” குறித்த கருத்தரங்கில் தெரிவித்திருக்கிறார். திமிங்கிலங்கள் “பெருங்கடலின் காடுகள்” என்று பெர்ஷிங் குறிப்பிட்டார்.

பூச்சிகளை எடுத்துக் கொள்வோமே. மனிதனுடைய பெரும்பாலான கண்டுபிடிப்புகளுக்கு பூச்சிகள்தான் முன்னோடிகள் என்று சொல்லப்படுகிறது. பறவையைப் பார்த்து விமானம் படைத்த மனிதன், அந்தரத்தில் ஒரே இடத்தில் நின்று பறக்கும் தட்டானை (தும்பி) பார்த்துதான் ஹெலிகாப்டர் கண்டுபிடித்தான். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மூளையாக இருந்தது கரையான் புற்றுதான் என்கிறார்கள். 'லின்னேயிஸ்' என்ற அறிஞர், 1758-ம் ஆண்டில் 74 வகையான உயிரினங்களை வகைப்படுத்தினார். அவற்றில் பூச்சிகள் மட்டும் 2,102 வகைகள் இருக்கின்றன என்று சொன்னார். இக்காலம்வரைக்கும் 15 இலட்சம் வகை பூச்சிகள் இருக்கிறதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால், இன்னும் கண்டுபிடிக்காத இனங்கள் அதைவிட பல இலட்சம் இருக்கும் என்று சொல்கிறார்கள். இலட்சக்கணக்கான சின்னச்சின்ன கண்கள் ஒன்று சேர்ந்ததுதான் பூச்சியின் கண்கள். நாம் வாய் மூலமாக எழுப்புகிற சத்தம், குறிப்பிட்ட தூரத்திற்குதான் கேட்கும். ஆனால் பூச்சிகளின் உடம்பில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து எழுப்புகிற சத்தம்... பல மைல் தாண்டி இருக்கின்ற இன்னொரு பூச்சிக்கு கேட்கும். உதாரணமாக சில்வண்டு தன்னுடைய வயிற்றின் அடியில் மத்தளம் போல இருக்கும் பகுதியில் உடம்பின் பக்கவாட்டில் உள்ள குச்சியை போன்ற காலை வைத்து அடிக்கும் சத்தம் அடர்ந்த காட்டில் பல மைல்கள் தாண்டி கேட்கும் என்கிறார்கள்.

மனிதன் குளிர்சாதன பெட்டியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னமே, காற்று வீசுகிற திசையைச் தீர்மானித்து கூடுகட்டி, வெப்பத்தை கூட்டுக்குள் புகவிடாமல் தடுக்கிற யுக்தியைத் தேனீக்கள் செய்து வருகின்றன. தென்னந்தோப்புகளில் தேன் பெட்டியை வைத்ததால், ஆண்டுக்கு 36 ஆயிரம் காய்கள் வீதம் விளைந்த 180 தென்னை மரங்களில் தற்சமயம் 47,520 காய்கள் கிடைப்பதாக தமிழகத்தின் கைத்தமலையைச் சேர்ந்த ஒரு விவசாயி கூறியிருக்கிறார். மண்புழு உழவனின் நண்பன் என்பார்கள். அது நிலத்தில் வாழ விடுவதால் ஏற்படும் பலன்கள் நமக்குத் தெரிந்த்தே.

அமேசான் காடுகளில் மட்டுமே பல இலட்சக்கணக்கான உயிரின வகைகள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றன. ஆனால் “உலகின் நுரையீரல்” எனக் கருதப்படும் இந்த அமேசான் பருவமழைக்காடுகள், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளால் ஒவ்வொரு நொடிக்கும் ஒன்றரை ஏக்கர் வீதம் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு இருபதாயிரம் சதுரமைல் வீதம் அழிந்து வருகின்றன. இந்த மழைக்காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் ஒவ்வொரு நாளும் 137, தாவர, விலங்கு மற்றும்பிற உயிரின வகைகளை, அதாவது ஓராண்டில் ஐம்பதாயிரம் உயிரின வகைகளை மனிதகுலம் இழந்து வருகிறது. அத்துடன் உயிர்க்கொல்லி நோய்களுக்கான மருந்துகளைத் தயாரிக்க உதவும் உயிரின வகைகளையும் இழந்து வருகிறது.

ஏனெனில் இக்காடுகள் கரியமிலவாயுவை பிராணவாயுவாக மாற்றும், உலகின் சுற்றுச் சூழலுக்குத் தேவையானப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறன. நூறு கோடி ஏக்கருக்கு மேற்பட்ட இந்த அமேசான் காடுகள், தென் அமெரிக்காவில் பிரேசில், வெனெசுவேலா, கொலம்பியா ஆகிய நாடுகளையும், ஈக்குவடோர் மற்றும் பெரு நாடுகளின் கிழக்கு ஆன்டியன்(Andean) பகுதியையும் உள்ளடக்கியது. உலகின் நிலபரப்பில் 14 விழுக்காட்டுப் பகுதியாக இருக்கும் இந்த அமேசான் பருவமழைக் காடுகளில், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏறத்தாழ ஒரு கோடி பூர்வீக இனத்தவர் வாழ்ந்தனர். ஆனால் தற்சமயம் இரண்டு இலடசத்துக்குக் குறைவானவர்களே உள்ளனர். பிரேசில் நாட்டில் மட்டும் ஐரோப்பிய காலனி நாட்டினர், 1900மாம் ஆண்டுகளிலிருந்து 90க்கும் அதிகமானப் பூர்வீக மக்களினங்களை அழித்துவிட்டனர். தற்சமயம் இந்தக் காடுகளில் வாழும் மருந்து தயாரிக்கும் ஆண்கள் மற்றும் சூனியக்காரர்கள், எழுபதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருக்கின்றனர். இவர்களில் ஒவ்வொருவர் இறக்கும் போதும் ஒரு நூலகமே எரிந்து சாம்பலானது போன்றதற்குச் சமம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகிலுள்ள ஏறத்தாழ ஒருகோடி தாவர, விலங்கு மற்றும்பிற பூச்சி வகைகளுள் பாதிக்கு மேல் இந்தப் பருவமழைக்காடுகளில் வாழ்கின்றன. உலகின் சுத்தமான நீரில் ஐந்தில் ஒரு பங்கு அமேசான் பகுதியில் உள்ளது. இங்கு ஒரு ஹெக்டேர் நிலப்பகுதியில் 750க்கும் மேற்பட்ட மரவகைகளும், 1500 உயர்தர தாவர வகைகளும் இருக்கின்றன. மேலும், கரீபியன் பகுதியில் உலகிலுள்ள பவளப் பாறைகளில் ஏழு விழுக்காடு, அதாவது ஏறத்தாழ இருபதாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பவளப் பாறைகள் உள்ளன. சைபீரிய நாரை வகைகள் மக்கள் தொகை பெருக்கம், வேட்டையாடுதல், தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் அவையும் குறைந்து வருகின்றன. மேலும், வாத்து, அன்னம் போன்ற உலகிலுள்ள 40 விழுக்காடு நீர்ப்பறவைகளும் அழிந்து வருகின்றன.

இன்று உலகில் பல்வகை உயிரினங்கள் அவற்றின் பெருக்கத்தைவிட ஆயிரம் தடவைகள் அழிவை எதிர்நோக்கி வருகின்றன என்று சில வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த உயிரினங்கள் இப்பூமியில் வாழ்வதால் மனித வாழ்க்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்வளவு நன்மை என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனம், இந்த 2010ம் ஆண்டை அனைத்து உயிரினப் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்து பல நாடுகளில் பன்னாட்டு கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு பற்றிப் பேசிய ஐ,நா.பொதுச் செயலர் பான் கி மூன்.........,

இந்த சர்வதேச ஆண்டு நிறைவு ஜப்பானின் Kanazawa வில் நிறைவு செய்யப்படும். அச்சமயத்தில் நடக்கும் கூட்டத்தில் 2011ம் ஆண்டு சர்வதேச காடுகள் ஆண்டாக அறிவிக்கப்படும் என்று ஐ.நா.அதிகாரிகள் கூறியுள்ளனர். தாய்லாந்து நாடும் இந்த ஆண்டை தாய்லாந்தின் பல்வகை உயிரின ஆண்டாக அறிவித்து உயிரினங்களைப் பாதுகாப்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. காரணம், தாய்லாந்தும் வளமான உயிரின வகைகளைக் கொண்டுள்ள பகுதியாகும். இங்கு, பன்னிரண்டாயிரம் vascular தாவர வகைகளும், 302 வகையான பாலூட்டிகளும், 982 வகையானப் பறவைகளும், 2100க்கு அதிகமான கடலில் வாழும் மீன் இனங்களும் 729 வகையான சுத்தநீரில் வாழும் மீனினங்களும் இருக்கின்றன. உலகிலுள்ள மீன் வகைகளில் பத்து விழுக்காடு தாய்லாந்தில் உள்ளன. 2002ம் ஆண்டு தென்னாப்ரிக்காவின் ஜொஹானஸ்பர்கில் நடைபெற்ற நிலையான வளர்ச்சி பற்றிய உலக உச்சி மாநாட்டில் பல்வகை உயிரினங்களைக் காப்பது குறித்த உடன்பாடு கொண்டுவரப்பட்டது. இதில் 188 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

ஆயினும் இந்த உடன்பாட்டின் செயல்திட்ட செயலர் Ahmed Djoghlaf ன் கூற்றுப்படி, உலக சுற்றுச் சூழல் அமைப்பின் மூன்றில் இரண்டு பகுதி கடும் அழிவை எதிர்நோக்கியுள்ளது. உலகின் சுமார் 80 விழுக்காட்டு உயிரின வகைகள் வெப்பமண்டல காடுகளில் காணப்படுகின்றன. எனினும் ஆண்டு தோறும் ஒரு கோடியே முப்பது இலட்சம் ஹெக்டேர் காடுகள் அழிந்து வருகின்றன. இந்த உயிரினங்களின் பெருமழிவுக்கு மனிதர்களே காரணம் என்று கூறியுள்ளார். இருந்த போதிலும், காடுகளை வளர்ப்பதில் ஜப்பான் உட்பட பல நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஜப்பானின் ஏறத்தாழ 70 விழுக்காடுப் பகுதி காடுகளால் நிறைந்துள்ளன. காடுகளைக் காப்பாற்றுவதால் நாடு உறுதியான முன்னேற்றத்தை நோக்கியும் செல்ல முடியும் என்று Djoghlaf மேலும் கூறினார். வரலாற்றில் மனித சமுதாயம் 12 ஆயிரத்துக்கு அதிகமான தாவரங்களைத் தனது உயிர் வாழ்க்கைக்குப் பயன்படுத்தியுள்ளது. எனினும் தற்சமயம், சோளம், நெல், கோதுமை போன்ற மூன்றை மட்டும் சார்ந்து இருக்கின்றது. இப்பூமியின் மரபணு வளங்களின் இழப்பு பெரிய பிரச்சனை என்றும் Djoghlaf தெரிவித்தார்.  எனவே அன்பர்களே, மரம், செடி, கொடிகள், ஊர்வன, பறப்பன, நீந்துவன என அனைத்து உயிரினங்களின் நன்மைகளை நாம் உணர வேண்டும். அவற்றைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும் என இந்த அனைத்து உயிரினப் பாதுகாப்பு ஆண்டு அழைப்பு விடுக்கிறது. வீட்டுக்கு ஒரு மரம் நட்டால் ஊரே பசுஞ்சோலையாகும். சுற்றுச்சூழலும் சுத்தமடையும். அப்போது மனங்களும் மாசு படியாமல் இருக்கும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடுவோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.







All the contents on this site are copyrighted ©.