2010-03-15 14:49:55

உரோம் நகரின் லூத்தரன் கிறிஸ்தவ சபை கோவிலைச் சந்திக்க சென்றார் திருத்தந்தை


மார்ச்15,2010 கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளில் அண்மைக்காலங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் இருக்கின்ற போதிலும், ஏற்கனவே ஒன்றிப்பு என்ற கூறு வேரூன்றப்பட்டுள்ளதற்கு நாம் நன்றி கூற வேண்டும் என்றார் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட்.
இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜெபிக்கவும், பாடவும், இறை வார்த்தைக்குச் செவி மடுக்கவும் இயன்று, அதன்வழி ஒரே கிறிஸ்துவுக்கு ஒன்றிணைந்து சாட்சி பகர இயலும் நிலை இருப்பது குறித்து நன்றியுள்ளவர்களாக இருப்போம் எனவும் கூறினார் பாப்பிறை.
உரோம் நகரின் லூத்தரன் சபை கோவிலைச் சந்திக்க இஞ்ஞாயிறன்று சென்ற திருத்தந்தை, அண்மைக் கால கிறிஸ்தவ ஐக்கிய நடவடிக்கைகள் குறித்து மன நிறைவுடன் நாம் அமைதி காக்க முடியாது, ஏனெனில் ஒரே இரசக்கிண்ணத்திலிருந்து பகிர்வதும், ஒரே திருப்பலி மேடையைச் சுற்றி நின்று திருப்பலி நிறைவேற்றுவதும் இன்னும் இயலக்கூடியதாக மாறவில்லை என்றார் பாப்பிறை.ஐக்கியம் என்பது மனிதனால் உருவாக்கப்பட முடியாதது, இறைவனே இதற்கு உதவ முடியும் என லூத்தரன் கிறிஸ்தவ சபையினருடனான சந்திப்பின் போது மேலும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.