2010-03-15 14:49:45

2010 உலக இளையோர் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி


மார்ச்15,2010. திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் துவக்கப்பட்ட உலக இளையோர் தினம், இவ்வாண்டு தன் 25ம் ஆண்டை சிறப்பிப்பதை முன்னிட்டு, அந்நாளுக்கான செய்தியை இத்திங்களன்று வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இம்மாதம் 28ந்தேதி, குருத்து ஞாயிறன்று "போதகரே, முடிவற்ற வாழ்வைப்பெற என்னச் செய்ய
வேண்டும்?" என்ற பணக்கார இளைஞன் இயேசுவிடம் கேட்டக் கேள்வியை தலைப்பாகாகக் கொண்டு சிறப்பிக்கப்படவுள்ள உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள், வரும் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பெயினின் மத்ரித்தில் சிறப்பிக்கப்படவுள்ள உலக இளையோர் தினத்திற்கான தயாரிப்பாக இருக்கும் என தன் செய்தியில் கூறியுள்ளார் பாப்பிறை.
பணக்கார இளைஞனுக்கும் இயேசுவுக்கும் இடையிலான சந்திப்பின் போது, இயேசு அவனை அன்பொழுக கூர்ந்து நோக்கியதைச் சுட்டிக்காட்டிய பாப்பிறை, ஒவ்வொரு இளைஞனும் வெற்றியான வாழ்வு மற்றும் தனக்கான இறைத் திட்டம் குறித்து அறிய இறைக் குரலுக்கு செவிமடுக்கப் பழக வேண்டும் என்றார்.
இயேசு கிறிஸ்து ஒவ்வோர் இளைஞரையும் தன்னைப் பின்பற்றும்படி அழைப்பதோடு, முடிவற்ற வாழ்வை நோக்கிய பாதையையும் காட்டுகிறார் என்ற திருத்தந்தை, பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் இளைய சமுதாயம் மனந்தளராமல் முன்னேற வேண்டியது அவசியம், ஏனெனில் திருச்சபைக்கு இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள் என மேலும் தன் செய்தியில் கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.