2010-03-12 10:09:02

தவக்காலச் சிந்தனை. - மார்ச் 13.


RealAudioMP3 ஒரு நபரது மேலாண்மைக்கும் அவரது ஆணவத்திற்கும் இடையே இருக்கக்கூடிய வித்தியாசம் என்ன?

ஸ்டீபன் R. காவே எனும் உளவியல் வல்லுநர் தனது, “சிறந்த பண்பாளர்களுக்கான ஏழு பழக்க வழக்கங்கள்” எனும் நூலில், ஒரு நபர் தன்னைப் பற்றிய உயர்வான எண்ணம் கொள்வது, தனது திறமைகளில் வளர்வதற்கு முயற்சியெடுத்து வெற்றியடைவது, வாழ்வில் குறிக்கோள் கொண்டு திட்டங்கள் தீட்டி முடிவு காண்பது, தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் தன்னைப்பற்றி நல்லுணர்வுக் கொள்வது, தனது நலனோடு சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுவது என ஒருவர் வாழும்போது அவர் மேலாண்மை உடையவராக இருக்கிறார்.

ஒருவர் தன்னை பிறரோடு ஒப்புமைப்படுத்தி தானே சிறந்தவர் அல்லது உயர்ந்தவர் என எண்ணுவது, பிறரை மட்டம் தட்டி இழிவாகப் பேசுவது, பிறர் முன்பாக தனக்கு தானே அனைத்தும் தெரியும் என்பது போல் நடந்து கொள்வது, தன்னலம் கொண்டவராக வாழ்வது என ஒருவர் இருக்கும்போது அவர் ஆணவம் உடையவராக இருக்கிறார்" எனக் குறிப்பிடுகிறார்.

இன்றைய நற்செய்தியில் தாங்கள் நேர்மையானவர்கள் என நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு 'பரிசேயர்-வரிதண்டுபவர்' உவமையைச் சொன்னதாக குறிப்பிடப்படுகிறது. இயேசு நம்மிடம் இருக்கும் ஆணவத்தை விரும்புவதில்லை.ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் மேலாண்மை உடைய பண்பாளர்களாக இருக்க வெண்டும் என ஆசைப்படுகிறார். தம்மை பிறர் முன்பாக தாழ்த்திக் கொள்பவர் உயர்த்தப்படுவார் என்கிறார்.

எனவே, கடவுள் முன்பாகவும் பிறர் முன்பாகவும் நம்மைத் தாழ்த்திக் கொள்வதில் தவறில்லை.

"கடவுளே பாவியாகிய என் மீது இரங்கியருளும்" என்ற நாம செபத்தை இன்றைய தினம் முழுவதும் சொல்லிப் பயன் பெறலாமே.

(இயேசு சபை அருட்தந்தை பவுல் ராஜ்.)








All the contents on this site are copyrighted ©.