2010-03-11 15:45:14

இந்தியாவில் வழக்கறிஞர்களாய் பணியாற்றி வரும் துறவிகள் கந்தமால் பகுதியில் வன்முறைகளுக்கு ஆளானவர்களுக்கு உதவிகள் செய்ய முடிவு


மார்ச்11,2010 சட்ட வல்லுனர்களாய் உள்ள இந்திய துறவற சபையினர் கந்தமால் பகுதியில் வன்முறைகளுக்கு ஆளானவர்கள் தங்கள் வழக்குகளை உச்ச நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உதவ முன் வந்துள்ளனர்.
இந்தியாவில் வழக்கறிஞர்களாய் பணியாற்றி வரும் பல்வேறு துறவற சபைகளைச் சார்ந்த 54 துறவிகள், இச்செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள் கட்டக் புபனேஸ்வர் பேராயர் Raphael Cheenathத்தைச் சந்தித்த போது இத்தைகைய தீர்மானம் எடுக்கப்பட்டது.
 கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஹைதராபாதில் துறவு  சபைகளைச் சார்ந்த வழக்கறிஞர்கள் சந்தித்தபோது, ஒரிஸ்ஸா வன்முறைகளின் மையமாய் இருந்த கந்தமாலில் தகுந்த நீதி கிடைக்காமல் வாடும் மக்களைத் தங்கள் சட்ட ரீதியான பணிகளின் இலக்காக கொண்டு உதவிகள் செய்ய முடிவுகளை எடுத்தனர்.
 ஒரிஸ்ஸா கிறிஸ்தவர்களுக்கு எதிராக 2008ஆம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக 3232 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அவைகளில் 831 புகார்களே காவல் துறையினரால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த புகார்களில் 120 மட்டுமே வழக்குகளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி வரை 60 வழக்குகளில் மட்டுமே நீதி வழங்கப்பட்டுள்ளன. அவைகளிலும் 89 பேரின் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு, மற்ற 251 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒரிஸ்ஸாவில் நடந்த வன்முறைகளில் 90 பேருக்கும் அதிகமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்; 50,000க்கும் அதிகமானோர் அனைத்தையும் இழந்துள்ளனர். இது வரை அரசாலும், நீதித்துறையாலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் எந்த வகையிலும் திருப்திகரமாக இல்லாததால், இந்த மக்கள் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்று துறவு சபை வழக்கறிஞர்கள் குழுமத்தின் தலைவர் அருட்சகோதரர் Varghese Theckanath கூறினார்.







All the contents on this site are copyrighted ©.