2010-03-10 15:25:36

பிலிப்பின்ஸில் அமைதி மற்றும் முன்னேற்றத்தை மையமாக வைத்து  நடைபெற உள்ள பன்னாட்டு, பல் சமய கருத்தரங்கு


மார்ச்10,2010 பிலிப்பின்ஸில் மார்ச் மாதம் 16 முதல் 18 வரை நடைபெற உள்ள பன்னாட்டு, பல் சமய கருத்தரங்கை ஏற்பாடு செய்வதற்கு அந்நாட்டில் ஆயர்களுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் இடையில் நிலவி வரும் ஒத்துழைப்பு பெரும் உதவியாக உள்ளதென பிலிப்பின்ஸ் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 அமைதி மற்றும் முன்னேற்றத்தை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் இறையியல் சார்ந்த கருத்துக்கள் விவாதிக்கப்படுவதற்கு பதில்,  எல்லா மதத்தினரையும் பாதிக்கும் ஏழ்மை, மக்கள் மேம்பாடு, அமைதி, மக்கள் பாதுகாப்பு போன்ற பொது கருத்துக்கள் விவாதிக்கப்படும் என்று இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்து வரும் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமைதி மற்றும் உலக முன்னேற்றத்திற்கான துறவிகள் (World Conference of Religious for Peace) என்ற அமைப்பின் தலைமைச் செயலர் William Bendley இக்கருத்தரங்கில் உரையாற்றுவார் என்று செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் 12 பேர் அடங்கிய ஒரு குழுவுடன் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கருத்தரங்கு முடிந்தபின் அண்மையில் கலவரங்களால் பாதிக்கப்பட்ட Mindanao பகுதியைப் பார்வையிட விழைவதாகவும் Davao உயர் மறைமாவட்ட பேராயர் Fernando Capalla செய்தியாளர்களிடம் கூறினார். 67 அணி சேரா நாடுகளின் 118 பிரதிநிதிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள உறுதி அளித்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.