2010-03-10 15:25:25

இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள பதுவை புனித அந்தோணியாரின் திருப்பொருளை ஆயிரக்கணக்கான பலசமய பக்தர்கள் தரிசித்தனர்


மார்ச்10,2010 இலங்கையின் கொச்சிக்காடே புனித அந்தோணியார் திருத்தலத்தில் வைக்கப்பட்டிருந்த பதுவை நகர் புனித அந்தோணியாரின் திருப்பொருளை ஆயிரக்கணக்கான பலசமய பக்தர்கள் தரிசித்தனர்.
கொழும்புவிலுள்ள இந்த அந்தோணியார் திருத்தலத்தின் 175ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இத்தாலியின் பதுவை நகர் புனித அந்தோணியாரின் இதயத்தின் ஒரு பகுதி, இத்தாலியிலிருந்து கொண்டு வரப்பட்டு இலங்கையின் பல இடங்களுக்கு 16 நாட்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
மார்ச் 7, இஞ்ஞாயிறன்று கொழும்பு வந்தடைந்த இப்புனிதப் பொருளை வரவேற்று திருப்பலி நிகழ்த்திய கொழும்பு பேராயர் மால்கம் ரஞ்சித், இறைவனில் ஆழமான விசுவாசம் கொண்டு சிறந்த கத்தோலிக்கர்களாக வாழ விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
அதேசமயம், புனித அந்தோணியார் போன்று பிறருக்கு ஒளியாகத் திகழுமாறும் பேராயர் கேட்டுக் கொண்டார்.
சமய வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இப்புனிதப் பொருளைத் தரிசித்த வண்ணம் இருக்கின்றனர்.புனித அந்தோணியார் மீது மிகுந்த பக்தி கொண்ட இலங்கை கத்தோலிக்கர், உள்நாட்டுப் போரால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு அமைதியைக் கொண்டு வருவார் என்ற தங்கள் நம்பிக்கையை தெரிவித்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.