2010-03-08 15:59:44

மகளிர் தினத்திற்கு வயது நூறு


மார்08,2010 மார்ச் 08. இத்திங்களன்று பல ஆண்கள் mamosa மஞ்சள்நிற மலர்க் கொத்துக்களுடன் நண்பிகளுக்கு, மனைவிகளுக்கு என பலதரப்பு மகளிருக்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சில ஊடகங்கள் பெண்கள் உறுதியானவர்கள், தனித்தியங்கக்கூடியவர்கள் என்றெல்லாம் பாராட்டியுள்ளன. ஆஸ்காரின் 82 வருட வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் இயக்குனர் சிறந்த இயக்குனருக்கான விருதைத் தட்டிச் சென்றுள்ளார். ஈராக் போரைப் பற்றி விவரிக்கும் “The Hurt Locker” என்ற படத்தை இயக்கிய Kathryn Bigelow என்ற பெண், ஹாலிவுட்டின் இந்தச் சிறந்த விருதைப் பெற்றுள்ளார். இக்காலத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக உலக தொழில் நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மை நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் பிரபலமடைந்து வருகிறாள் ஏமன் நாட்டு பத்து வயது கிராமத்துச் சிறுமி Nujood Ali.

Nujood Ali குறித்த சுயசரிதை, “I am Nujood, Age 10 and Divorced” என்ற தலைப்பில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடந்த வாரத்தில் புத்தகமாக வெளியாகியுள்ளது. Delphine Minoui என்ற ப்ரெஞ்ச் தினத்தாள் நிருபர் இதனை எழுதியுள்ளார். இந்த புத்தகம் Nujoodன் தாய் மொழியான அரபு உட்பட 18 மொழிகளில் வெளியாகியுள்ளது. பிரான்சில் வெளியான சமயத்தில் ஐந்து வாரங்களுக்கு அமோக விற்பனையில் முதலிடத்தைப் பெற்றது. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு செயலர் ஹில்லரி கிளிண்டன், “Nujood, இதுவரை நான் பார்த்த மாபெரும் பெண்களில் ஒருவர்” என்று பாராட்டியுள்ளார். 2008ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டு பத்திரிகை ஒன்று, இவளை “ஆண்டின் சாதனைப் பெண்” என்று கௌரவித்தது. அவளின் சாதனைதான் என்ன?

அது 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த, பத்து வயதே நிரம்பிய சிறுமி Nujoodவை அவளது குடும்பத்தினர் 30 வயது ஆணுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். சிறுமி பூப்பெய்தி ஓராண்டுவரை அவளைத் தொட வேண்டாமென்று அவளது தந்தை, மணவாளனிடம் திருமணத்தின் போது சொல்லியிருந்தார். ஆனால் Nujoodவின் கணவன் அவளை ஒவ்வொரு நாள் இரவும் அடித்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். புகுந்த வீட்டில் யாரும் அவளுக்கு இரக்கம் காட்டவில்லை. மாறாக மாமியாரின் தூண்டுதலின் பேரில் அவள் மேலும் அடிபட்டாள். திருமணமான பெண் பள்ளிக்குச் செல்லக் கூடாது என்று சொல்லி விட்டனர். இரண்டு மாதங்களாக ஒவ்வோர் இரவும் சித்ரவதை செய்யப்பட்ட பின்னர் அவள் தனது பெற்றோரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டாள். Nujood வின் தந்தை தெருவை சுத்தம் செய்யும் முன்னாள் தொழிலாளி. அவருக்கு இரண்டு மனைவிகள். 16 பிள்ளைகள். குடும்ப வறுமை காரணமாக வரதட்சணை பெற்றுக் கொண்டு 10 வயது மகளை, 30 வயதான மோட்டார்வாகன விநியோகஸ்தருக்கு மணமுடித்து வைத்தார். ஆதலால் மகளின் புகாரை ஏற்க மறுத்தார். ஆனால் கடைக்குச் சென்று சாமான் வாங்கிவர அவளது தாய் கொடுத்த காசை வைத்து பேருந்தில் ஏறி ஏமன் தலைநகர் Sanaa சென்றாள். அங்கு நீதிமன்றம் சென்று பார்வையாளர் பகுதியில் அமர்ந்து கொண்டு, “நான் யாராவது ஒரு வழக்கறிஞரைப் பார்க்க வேண்டும்” என்று சத்தமாகச் சொல்லிக் கொண்டே இருந்தாள். யாரும் சட்டை செய்யவில்லை. இறுதியில் எப்படியோ அவளிடம் பேசிய வழக்கறிஞர் ஒரு பெண்ணுரிமை ஆர்வலர். இவளின் கதையைக் கேட்டு மனம் உருகிய அந்த வழக்கறிஞர் பணம் எதுவும் பெறாமல் திருமணமுறிவுக்கு ஒழுங்கு செய்தார். உடனே சில அமெரிக்கச் செய்தித் தாள்கள் இவளது வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டின. 2008ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி Nujoodவுக்குத் திருமணவிலக்கும் கிடைத்தது. தற்சமயம் வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசையில் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிறாள் Nujood.

Nujood ன் விவகாரம் விசாரிக்கப்பட்டு வந்த நாட்களில் அவள் எதிர்கொண்ட வன்முறைகளைக் கேட்டு அதிர்ந்த ஏமன் சட்டஅமைப்பாளர்கள், அந்நாட்டில் பெண்ணின் திருமண வயதை 15 லிருந்து 18க்கு உயர்த்தினர். அந்தச் சமயத்தில் ஏமனில் 9 மற்றும் 12 வயதான இன்னும் இரண்டு திருமணமான சிறுமிகளும் திருமணமுறிவுக்கு வழக்குத் தாக்கல் செய்தனர். 50 வயது ஆணை மணந்திருந்த 8 வயது சவுதிச் சிறுமிக்கும் திருமணத்திலிருந்து விடுதலை கிடைத்தது. ஏமன் நாட்டுச் சட்டங்கள் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக இருந்தாலும், அந்நாட்டில் ஏறத்தாழ 52 விழுக்காட்டுச் சிறுமிகள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். இந்தக் குழந்தைத் திருமணம் தெற்கு ஆசியாவிலும், ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவலாக இடம் பெற்று வருகிறது. ஏன், இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் சட்டப்படி பெண்களின் திருமண வயது 18 ஆக இருக்கின்ற போதிலும், சிறுமிகளில் ஏறத்தாழ பாதிப்பேர் மணப்பெண்களாகவும், மூன்றில் ஒரு பகுதியினர் இளம் தாய்களாகவும் இருக்கின்றனர் என்று யூனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைநல நிதி அமைப்பு கடந்த வாரத்தில் அறிவித்திருந்தது.

அன்பர்களே, இந்தச் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார், தமிழக முதல்வர் கருணாநிதி உட்பட பல தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறோம். ஆயினும் இந்த ஆண்டு 100 வது ஆண்டு என்பதில் கூடுதல் சிறப்பு என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார். நேபாளம் மற்றும் பூட்டானைத் தவிர, 1970களிலிருந்து ஏறத்தாழ ஒவ்வொரு தெற்கு ஆசிய நாட்டிலும் பெண்களால் நாடுகள் வழிநடத்தப்பட்டுள்ளன. சிலர் நீண்ட காலங்கள்கூட ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். இப்படியிருந்தும்கூட பாலின சமத்துவம் இன்னும் ஏற்படவில்லை. உலகெங்கும் தேசிய நாடாளுமன்றங்களில் பெண் உறுப்பினர்கள் ஏறத்தாழ 18 விழுக்காடு என்ற அளவிலேயே இருக்கின்றது.

இந்தியாவை எடுத்துக் கொண்டால், அதன் முதல் பெண் பிரதமர் திருமதி இந்திரா காந்தி. முதல் கவர்னர் பதவி வகித்த பெண் கவிக்குயில் சரோஜினி நாயுடு. முதல் பெண் முதலமைச்சர் சுதேசா கிருபளானி. இந்தியாவில் முதல் முதல் டாக்டருக்குப் படித்தவரும், இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினராகவும், முதல் துணை சபாநாயகராகவும் பதவி வகித்த பெண்மணி முத்துலட்சுமி ரெட்டி அம்மையார். இந்தியாவில் 'ஷெரிப்' பதவி வகித்த முதல் பெண்மணி, 'கிளப் வாலா ஜாதவ்' என்ற பார்சியாவார். இந்தியாவில் மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பதவி வகித்த முதல் பெண்மணி அஞ்சனி தயானந்த். இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி 'அபலோ போன்குன்னா' என்பவர். இவர் விஞ்ஞானி சந்திரபோஸின் மனைவி. இந்தியாவின் முதல் பெண் இசை அமைப்பாளர் 'உஷாகன்னா'. இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே உள்ள ஆங்கிலக் கால்வாயைக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி 'அரதிசாஷா'. முதல் காங்கிரஸின் முதல் பெண் பேச்சாளர் 'கடம்பினி கங்குலி'.

இப்போதும்கூட இந்தியாவின் குடியரசுத் தலைவர், மக்களவை சபாநாயகர் 'மீரா குமார்', காங்கிரஸ் தலைவர் 'சோனியா காந்தி', மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்... 'சுஷ்மா சுவராஜ்' என ஆட்சியிலும் அதிகாரத்திலும் மிக முக்கிய பொறுப்புகளை தலைமையேற்று நடத்திக் கொண்டிருப்பவர்கள் பெண் ஆளுமைகள்தான். இருந்தாலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா 100வது மகளிர் தின பரிசாக, ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்படுமா? "கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்காக, நிதி உதவி அளிப்பதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்,'' என, கடந்த சனிக்கிழமை டில்லியில் நடந்த தேசிய அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியிருப்பது செயல்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. பாகிஸ்தானில்கூட 21.3 விழுக்காட்டுப் பெண்கள் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள். ஆனால் இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதிப்பேர் பெண்களாக இருந்தாலும், அந்நாட்டின் 545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் மொத்தம் 49 பேரே பெண்கள்.

1911ம் ஆண்டு நியுயார்க் நகரத் தெருக்களில், குறைந்த வேலை நேரங்கள், தரமான ஊதியம், ஓட்டுரிமை, குழந்தைத் தொழிலாளர் அமைப்பு முறையை தடுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பெண் தொழிலாளர்கள் போராடிய போது இந்த சர்வதேச மகளிர் தினம் உண்மையிலேயே ஆரம்பமானது என்று சொல்லலாம். ஏனெனில் 1909ம் ஆண்டிலே இந்த மகளிர் தினம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று ஐ.நா. வெளியிட்ட தகவலின்படி, உலகில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 130 கோடிப் பேரில் பெரும்பாலானோர் பெண்கள். ஒரேஅளவான வேலைக்கு ஆண்களைவிட பெண்கள் 30 முதல் 40 விழுக்காட்டுக்கு குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். உலக அளவில் பெண்கள் மத்தியிலான இறப்புக்கும் ஊனமடைதலுக்கும் குறிப்பிடத்தக்க காரணங்களாக இருப்பவை, பாலியல் பலாத்காரம் மற்றும் குடும்ப வன்முறையாகும். இந்தியாவில் ஒரு மணிக்கு 18 பெண்கள் வீதம் பாதிக்கப்படுகின்றனர். அண்மையில் கர்நாடக மாநிலத்தில் வரதட்சணை காரணமாக, ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் 21 வயதான மனைவியின் முகத்தில் மாமியார், கோபத்தில் அவ்வப்போது கொதிக்கும் பாலை ஊற்றியதாகவும், இதற்கு மொத்த குடும்பமும் ஆதரவாக இருந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

நியுயார்க்கில் தற்போது நடைபெற்று வரும் பெண்கள் குறித்த இரண்டு வார மாநாட்டில் பேசிய ஐ.நா. உதவிப் பொதுச் செயலர் Asha Rose Migiro, உலகில் மூன்று பெண்களுக்கு ஒருவர் வீதம் உடல்ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக வன்முறையை எதிர்கொள்கின்றனர். இந்த அநீதிகள் களையப்பட்டு பாலின சமத்துவம் கொண்டுவரப்பட்டால் மட்டுமே பெண்கள் முன்னேற முடியும் என்றார்.

RealAudioMP3 இந்த நூறாவது உலக மகளிர் தினத்திற்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலரும், பாலின சமத்துவம் தேவை, பொருளாதார வாய்ப்புக்களை விரிவாக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் RealAudioMP3 என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

சிறுவன் ஒருவன், அழுது கொண்டிருந்த தனது தாயிடம் அம்மா ஏன் அழுகிறாய் என்று கேட்டான். அதற்கு அந்தத் தாய், நான் பெண்ணாகப் பிறந்ததற்காக என்றாள்.

அவனுக்குப் புரியவில்லை. எனவே தந்தையிடம் கேட்டான், அதற்கு அவர், எல்லாப் பெண்களும் காரணமின்றி அழுவார்கள் என்றார். புரியவில்லை.

அவன் வளர்ந்து வாலிபனானதும் கடவுளிடம் இதே கேள்வியைக் கேட்டான்.

அதற்கு அவர், நான் பெண்களைப் படைத்த போது அவர்கள் சிறந்தவர்களாக இருகக வேண்டிய தேவை ஏற்பட்டது.

அவர்களுக்கு வாழ்வின் வல்லமையைக் கொடுத்தேன். பிள்ளைகளிடமிருந்து வரும் புறக்கணிப்பைத் தாங்கிக் கொள்ள.

எல்லாரும் கைவிட்டநிலையில், நோய் சோர்வு என்றுகூட பார்க்காமல், தம் பிள்ளைகள் தன்னைப் புண்படுத்தும்போதும்கூட, அவர்களை வரையறையின்றி அன்பு செய்ய,

கணவனை அவனின் குறைகளோடு ஏற்றுக் கொள்ள

இறுதியில் அவள் விரும்பும் போது அழுவதற்குக் கண்ணீரைக் கொடுத்தேன்

அவளது கண்ணீர் வழியாக அவளது இதயத்தின் போக்கை நீ புரிந்து கொள்வாய்.

மகனே, ஒரு பெண்ணின் அழகு அவளது ஆடை அலங்காரத்திலோ அவளது முகத்திலோ அல்ல

மாறாக அவளது அழகு அவளின் கண்களில் உள்ளது. அவை அவளது இதயத்தின் கதவாகும். இங்கு அன்பு வாழ்கின்றது.

உண்மை அன்புக்கு இலக்கணமாக இருக்கும் பெண்ணினத்தைப் போற்றுவோம். அவர்களின் உரிமைகள் காக்கப்பட அனுமதிப்போம், உழைப்போம்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.