2010-03-06 16:02:59

மார்ச் 8 தவக்காலச் சிந்தனை


RealAudioMP3 “தொழுகைக் கூடத்தில் இருந்த யாவரும் இயேசுவின் மீது சீற்றங் கொண்டனர். அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே சென்று அங்கிருந்து போய்விட்டார்”

இந்த விவிலிய பகுதியை நாம் வாசிக்கும் போது இயேசுவினுடைய ஆளுமைத்தன்மை அதில் ஒளி வீசுவதைக் காண முடிகிறது. உண்மையைப் பொய்மையில் இருந்து பிரித்தெடுப்பது; உண்மையை சரியாக அறிவது; உண்மையை உள்ளவாறு அதற்குப் பங்கம் விளைவிக்காமல் எவ்விடையூறு வந்தாலும் எடுத்துரைப்பது; இறைவாக்கினராக இடித்துரைத்து எரிமலை போல கலகம் செய்து உண்மையாக மாறி விடுவது என இயேசுவின் ஆளுமைத்தன்மையில் உண்மையை மையப்படுத்திய அவரது குணம் வெளிப்படுகிறது.

மேலும் கொலைவெறியோடு இயேசுவை இழுத்துச் செல்லும் மக்கள் கூட்டத்திலிருந்து அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போவது இயேசுவின் ஆளுமைத்தன்மையின் மறுபகுதி. இயேசுவிடம் பயம் கிடையாது. ஏனென்றால் இயேசுவிடம் கடவுளின் மீதும் மக்கள் மீதும் அன்பு இருந்தது. அன்பு இருக்கும் இடத்தில் பயம் இல்லை.

இத்தவக்காலத்தில் இறைவாக்கினராகிய இயேசுவிடம் இருந்ததைப் போன்று உண்மையோடு அன்பும் கொண்டு நாமும் “வாழும் இறைவாக்கினர்களாக” வாழ முயற்சிப்போம். (எழுதி வழங்கியவர் அ.பணி.பவுல்ராஜ் சே.ச)








All the contents on this site are copyrighted ©.