2010-03-05 14:44:34

உகாண்டா பொதுநிலை விசுவாசிகளும் குருக்களும் தன்னலக் கலாச்சாரத்திற்கு அடிமையாகாமல் இருக்க திருத்தந்தை வேண்டுகோள்


மார்ச்05,2010 உகாண்டாவில் இவ்வாரத்தில் பெய்துவரும் கனமழை, பெரும் மண்சரிவு, பெருவெள்ளம் ஆகியவற்றால் இறந்துள்ள மக்களுக்கானச் செபத்தைத் தெரிவித்த அதேவேளை, அவற்றில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடனான தனது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை பாப்பிறையைச் சந்திக்கும் Ad Liminaவை முன்னிட்டு உகாண்டா நாட்டின் 26 ஆயர்களை இவ்வெள்ளிக்கிழமை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

மேலும், உகாண்டா கத்தோலிக்கர், திருமணத்தின் முறிவுபடாத்தன்மையையும், வாழ்வதற்கான புனித உரிமையையும் மதித்து நடப்பதற்கு ஆயர்கள் உதவுமாறு திருத்தந்தை வலியுறுத்தினார்.

பொதுநிலை விசுவாசிகளும் குருக்களும் தன்னலக் கலாச்சாரத்திற்கு அடிமையாகாமல் இருப்பதில் ஆயர்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்ட திருத்தந்தை, நீதியை அடிப்படையாகக் கொண்ட நிலைத்த அமைதியைக் கட்டி எழுப்புவதில், உரையாடல் மற்றும் ஒப்புரவுக்கான உணர்வில் செயல்படவும் வலியுறுத்தினார்.

ஊடகம், அரசியல், கலாச்சாரம் ஆகிய துறைகளில் முழுமையாய் ஈடுபட்டுள்ள பொதுநிலை விசுவாசிகள், நீதி மற்றும் உயரிய மதிப்பீடுகளுக்காக எப்பொழுதும் உழைக்க அவர்களை ஆயர்கள் ஊக்கப்படுத்துமாறு திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

இந்தக் குருக்கள் ஆண்டில், ஆயர்கள் தங்களது எடு்த்துக்காட்டான வாழ்வு மற்றும் தெளிவான போதனைகள் மூலம் குருக்களை வழிநடத்துமாறும் பரிந்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

அதேசமயம், உகாண்டா குருக்களும் துறவிகளும் தங்களது ஆலோசனைகள், செபம் ஆகியவற்றினால் எடு்த்துக்காட்டாக வாழுமாறும், ஏழைகள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும்பிற நோயாளிகள் மத்தியில் வேலை செய்வோரை ஆயர்கள் ஊக்கப்படுத்துமாறும் கூறினார் திருத்தந்தை.

உகாண்டாவின் கிழக்குப் பகுதியில் இவ்வாரத்தில் பெய்துவரும் கனமழை, மண்சரிவு, வெள்ளம் ஆகியவற்றால் எல்கோன் மலையடிவாரத்திலுள்ள மூன்று கிராமங்கள் சகதியில் மூழ்கியுள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பெருவெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன மற்றும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்







All the contents on this site are copyrighted ©.