2010-03-04 15:11:04

நில நடுக்கம், சுனாமி இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென சிலி ஆயர்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது


மார்ச்04,2010 கடந்த சனிக்கிழமை சிலி நாட்டைத் தாக்கிய நில நடுக்கம், சுனாமி இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான ஆதரவை தனிப்பட்டவர்களும், குழுக்களும் அளிக்க வேண்டுமென சிலி ஆயர்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆயர்கள் சார்பில் அந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஆயர் பேரவைத் தலைவர் Alejandro Goic இந்த நில நடுக்கத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்த திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களைத் தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
தங்கள் நாடு இன்னும் சில நாட்களில் அரசு மாற்றத்தை எதிர் நோக்கியிருக்கும் இவ்வேளையில், பழைய அரசும், புதிதாகப் பொறுப்பேற்கும் அரசும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மீண்டும் இந்த நாட்டை நீதியிலும், சமத்துவத்திலும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் இந்தச் செய்தியில் ஆயர் Goic கூறியுள்ளார்.
இந்த பேரிழப்பின் நேரத்திலும் திருட்டு, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டு தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக Santiago உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் Francisco Javier Errazuriz வேறொரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.8.8 ரிக்டர் அளவில் சிலி நாட்டைத் தாக்கிய நில நடுக்கம் ஹெயிட்டியைத் தாக்கிய நில நடுக்கத்தை விட 500 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது என்றும், இந்நிலநடுக்கத்தால் 720 பேர் இறந்துள்ளனர் என்றும் மற்றும் 20 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.