2010-03-03 15:15:55

ஸ்பெயினில் நடைபெற விருக்கும் இளையோரின் உலக மாநாட்டில் மாற்றுத் திறனுடையோரும் முழுமையாகப் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன


மார்ச்03,2010 ஸ்பெயினின் Madrid நகரில் 2011ஆம் ஆண்டு நடைபெற விருக்கும் இளையோரின் உலக மாநாட்டில் செவித்திறன், பேச்சுத்திறன் இழந்த இளையோரும் முழுமையாகப் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இம்மாநாட்டினை ஏற்பாடு செய்து வரும் அமைப்பின் தொடர்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உலகில் இன்று பேச்சு வழக்கில் உள்ள பல்வேறு மொழிகளைப் பேசுவோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வசதிகள் செய்யப்படுவது போல், மொழிகள் பேச முடியாதவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனுடையோரை வரவேற்று அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து தருவதற்கென்று தனிப்பட்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்திக் குறிப்பு கூறுகிறது.
இந்த மாநாட்டில் கிடைக்கும் இயேசு கிறிஸ்துவின் அனுபவத்தை எந்த வகையிலும் குறைவின்றி நிறைவாகப் பெறுவதற்கு மொழித்தொடர்பு ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாதென்பதில் தாங்கள் கருத்தாய் இருப்பதாக இந்த ஏற்பாடுகளைச் செய்யும் குழுவில் அங்கத்தினராகப் பணி புரியும் செவித்திறன் குறைந்த  Jaime Gutierrez என்ற இளைஞர் கூறியுள்ளார்.இந்த இளையோர் உலக மாநாட்டில் பங்கு பெறும் மாற்றுத் திறனுடைய இளையோர், சிறப்பாக ஏழ்மையில் வாடும் நாடுகளிலிருந்து வரும் இத்தகைய இளையோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதே இந்த மாநாட்டின் ஒரு முக்கிய நோக்கமாகும் என்று திரு Gutierrez மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.