2010-03-03 15:20:43

2020ல் 500 விழுக்காடு மின்னணுப் பொருட்களின் கழிவுகள் அதிகரிக்கும்


மார்ச்03,2010 சுற்றுச்சூழலைப் பாதிக்கும் மின்னணுப் பொருட்களின் கழிவுகளை துப்புரவு செய்வதில் வளரும் நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்நாடுகள் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கக் கூடும் என்று ஐ.நா.,வின் ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
வளரும் நாடுகள், பழைய செல்லிட பேசிகள், கணினிகள், தொலைகாட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களின் கழிவுகளை அகற்றுவதில் உடனடியாக கவனம் செலுத்தவில்லையெனில் அவை அந்நாடுகளில் மலைபோல் குவிந்து விடும் என்று ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் ஆய்வு குறுகிறது.
"இந்தியாவில், இந்தக் கழிவுகள், கடந்த 2007ம் ஆண்டில் இருந்ததை விட, 2020ம் ஆண்டு 500 விழுக்காடு அதிகரிக்கும்' எனவும் அவ்வாய்வு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, சீனா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் 2007ம் ஆண்டில் இருந்ததை விட, 400 விழுக்காடு அதிகரிக்கும்' எனவும் எச்சரித்துள்ளது அவ்வாய்வு.
உலகில் அமெரிக்க ஐக்கிய நாடு ஆண்டுக்கு ஏறத்தாழ 30 இலட்சம் மெட்ரிக் டன் கழிவுகளையும் சீனா 23 இலட்சம் மெட்ரிக் டன் கழிவுகளையும் சேகரிக்கின்றன என்றும் ஐ.நா.வின் ஆய்வு கூறுகிறது. உலகளவில், ஆண்டுக்கு நான்கு கோடி டன் மின்னணுக் கழிவுகள் சேர்கின்றன. இவற்றில் இருந்து காப்பர் மற்றும் தங்கம் போன்றவற்றை எடுப்பதற்காக, துப்புரவு பணியாளர்கள், இவற்றை முறையின்றி எரிக்கும் போது அதில் இருந்து நச்சு உருவாகிறது.







All the contents on this site are copyrighted ©.