2010-03-01 15:49:53

கத்தோலிக்கர் அரசியலில் இணைவதை ஊக்குவிக்கும் ஆயர்களின் முயற்சிகளுக்கு வடகிழக்கு இந்திய கத்தோலிக்க அரசியல்வாதிகள் ஆதரவு


மார்ச்01,2010 கத்தோலிக்கர் அரசியலில் இணைவதை ஊக்குவிக்கும் ஆயர்களின் முயற்சிகளுக்கு வடகிழக்கு இந்திய கத்தோலிக்க அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

163 ஆயர்கள் கலந்து கொள்ளும் குவஹாட்டி கூட்டத்திற்குச் சென்ற அரசியல்வாதிகள், ஆயர்களைச் சந்தித்து அப்பகுதியில் சுமார் 125 ஆண்டுகளாகத் திருச்சபை ஆற்றி வரும் பணிகளுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

இந்த அரசியல்வாதிகளை வரவேற்றுப் பேசிய மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ், வடகிழக்கு இந்தியாவில் பல கத்தோலிக்க அரசியல்வாதிகள் இருப்பது கண்டு இந்திய திருச்சபை பெருமைப்படுகிறது என்று கூறினார்.

இந்த அரசியல்வாதிகளில் பலர் இளம் வயதினராய் இருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் கிராசியாஸ், இவர்களின் இருப்பு, இளையோர் தொடர்புடைய திருச்சபையின் முயற்சிகளுக்கு புதிய உந்துதல் அளிப்பதாக இருக்கின்றது என்றும் கூறினார்.

இந்திய மத்திய அமைச்சர்களில் மிகவும் இளையவரான 29 வயது ஆகத்தா சங்கமா பேசுகையில், வடகிழக்கு இந்தியர்கள் திருச்சபையின் பணிகளுக்கு, குறிப்பாக திருச்சபையின் கல்விப்பணிக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், இந்திய ஆயர்களும் இளையோரும் மூன்று நாட்கள் ஒன்றாக இருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது, ஒருவர் மற்றவரை நன்றாகப் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது என்று அவ்விரு தரப்பினருமே தெரிவித்துள்ளனர்.

குவஹாட்டியில் நடைபெறும் இளையோர் குறித்த இந்திய ஆயர் பேரவை கூட்டம் வருகிற புதனன்று நிறைவடையும்.








All the contents on this site are copyrighted ©.