2010-02-27 15:56:28

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
ஒரு முழு ஆறு அருவியாகக் கொட்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு முழு ஆறு இரண்டாகப் பிரிந்து, 1,060 அடி அகலமுள்ள ஒரு பகுதி 176 அடி உயரமான ஒரு அருவியாகவும், 2,600 அடி அகலமுள்ள ஆற்றின் மற்றொரு பகுதி ஒரு குதிரை லாடத்தைப் போல் வளைவாக 167 அடி உயரமான ஒரு அருவியாகவும் விழும் அழகை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தேன்.
ஆம் அன்பர்களே, நான் சொல்வது நயாகரா நீர்விழ்ச்சியைப் பற்றி. இந்தியாவின் பல இடங்களில் மணல் ஓடும் ஆறுகளையே பார்த்து பழகிவிட்ட எனக்கு அருவியாகக் கொட்டும் அந்த ஆற்றைப் பார்த்தது ஒரு வித்தியாசமான அனுபவம். இந்த இரு அருவிகள் வழியாக ஒரு நொடிக்கு 7,50,000 காலன் அதாவது 28 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர், சுத்தமான, குடிப்பதற்கு உகந்த தண்ணீர் வந்து விழுகின்றது.
இந்த எண்களைப் புரிந்து கொள்ள ஒரு கணக்கு சொல்கிறேன். சென்னையின் தற்போதைய மக்கள் தொகை 45 லட்சம் என்று சொல்லப்படுகிறது. ஒருவருக்கு ஒரு நாளைக்குத் தேவையான குடி நீர் 6 லிட்டர் என்று கணக்கிட்டால், ஒரு நாளைக்கு சென்னைக்குத் தேவையான குடி நீர் 2 கோடியே 70 லட்சம் லிட்டர். இந்தத் தண்ணீர் அந்த அருவியின் வழியே பத்து நொடிகளில் கீழே விழுகிறது. ஒரு மணி நேரம் அங்கு விழும் தண்ணீரை மட்டும் சேகரித்தால், சென்னைக்குத் தேவையான குடிநீர் ஒரு வருடத்திற்கு வரும். (The population of Chennai, India is 4328063 according to the GeoNames geographical database. The data for this record was last updated 2009-03-17.)
மற்றொரு கணக்கு. ஒவ்வொரு சென்னை வாசிக்கும் ஒரு நாளுக்கு சராசரி 100௦ லிட்டர் தண்ணீர் தேவை என்றால், சென்னை மாநகருக்கு ஒரு நாளுக்குத் தேவைப்படும் மொத்த நீர் அந்த இரு அருவிகள் வழியே 3 நிமிடங்களில் கொட்டுகிறது. அங்கு கொட்டும் நீரை ஒரே ஒரு நாள் மட்டும் சேகரித்தால், சென்னையின் நீர் பிரச்சனையை ஒன்றரை வருடங்கள் தீர்க்கலாம்.
அன்பு நெஞ்சங்களே, நயாகராவைப் பற்றிய சுற்றுலா விவரங்களை நான் தருவதாக எண்ண வேண்டாம். அந்த அற்புத காட்சி இத்தனை ஆண்டுகள் ஆகியும் என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டதால் உங்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டேன். நயாகரா போன்ற இயற்கை அற்புதங்கள் உலகில் பல ஆயிரம் உள்ளன. அவைகளில் சிலவற்றை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதுவரை படங்களில் பார்த்து ரசித்த அந்த பிரம்மாண்டமான அருவியை அன்று நேரில் பார்த்தபோது, எனக்கு என்ன நடந்தது என்பது தான் இன்றைய ஞாயிறு சிந்தனைக்குத் தேவை. நயாகராவைப் பார்த்த நான் பிரமிப்பில், வியப்பில் பேச முடியாமல் உறைந்து போனேன். கண்களில் லேசாக கண்ணீர்.

அழகிய ஓர் உதயம், பனியும் மேகமும் உறங்கும் மலை முகடுகள், பனித்துளியைத் தாங்கி, சூரிய ஒளியில் வைரமாய் மின்னும் மலர்கள், கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பு, நிசப்தமான ஒரு சமவெளியில் தூரத்தே ஒலிக்கும் அழகிய புல்லாங்குழல் இசை, காற்றில் கலந்து வரும் மலர்களின் மணம்... அன்புள்ளங்களே, வாழ்வில் இப்படி நாம் சந்திக்கும் அற்புதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பிரம்மாண்டமாக வந்தாலும் சரி, மென்மையாக வந்தாலும் சரி இந்த அனுபவங்களுக்கு நம்மில் பலர் தரும் ஒரே பதில் மௌனம். “இயற்கையின் மொழிகள் புரிந்து விடில், மனிதரின் மொழிகள் தேவையில்லை” என்று நான் கேட்ட ஒரு திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது.
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் மனிதரின் மொழிகள் கொண்டு பேச முடியாமல் தவித்த நேரங்கள் பல உண்டு.
வேதனையில் உள்ளம் உறைந்து போகும் போது...
கோபத்தின் எல்லையைக் கடக்கும் போது...
மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காடும் போது...
இப்படி உணர்ச்சிகளின் உச்சத்தை நாம் தொடும் போதெல்லாம், பேச்சிழப்போம், கண்ணீர் விடுவோம்.
இந்த அனுபவம் பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற இயேசுவின் சீடர்கள் மூவருக்கும் ஒரு நாள் ஏற்பட்டது. இயேசு உருமாறியதைக் கண்ட இந்த சீடர்கள் பேச்சிழந்தனர். மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற மூன்று நற்செய்திகளிலும் இந்த நிகழ்ச்சி கொடுக்கப் பட்டுள்ளது. இன்று நாம் லூக்கா நற்செய்தியிலிருந்து இந்த நிகழ்வை கேட்போம்.
(லூக்கா 9: 28-36; மத். 17: 1-8; மாற். 9: 2-8) 
சில மாதங்களுக்கு முன் இயேசு உருமாறிய நிகழ்ச்சியை விவிலியத் தேடலில் சிந்தித்தோம். அன்று நம் சிந்தனைகளெல்லாம் இயேசுவைப் பற்றி, உருமாற்றத்தைப் பற்றி அதிகம் இருந்தன. இன்று அந்த உருமாற்றம் சீடர்களிடம் உருவாக்கிய மாற்றங்களை சிந்திப்போம். இயேசு உருமாறியதைக் கண்ட சீடர்கள், பேச்சிழந்தனர், பயந்தனர், பின்னர் அவர்களுள் பேதுரு மட்டும் என்ன பேசுகிறோம் என்பதை உணராது எதையோ பேசினார்.
பேச்சு, அல்லது மொழி பெரும்பாலும் அறிவு சார்ந்த ஒரு செயல். எழுகிற எண்ணங்களுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கிறோம். நம் எண்ணங்கள் எல்லாவற்றையும் வார்த்தைகளாக வடிக்க முடியாது, அதேபோல் நம் எண்ணங்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நம்மால் பேச முடியாது. இவை நமக்குத் தெரிந்த தகவல்கள் தாம்.
எண்ணங்களின் வேகத்திற்கே ஈடுகொடுக்க முடியாத வார்த்தைகள், உணர்வுகள் என்று வரும் போது இன்னும் ஊமையாகி விடுகின்றன. நம் உணர்வுகளுக்கு ஓரளவே வார்த்தை வடிவம் கொடுக்க முடியும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் சொற்களைத் தாண்டிய, சொற்களில் அடங்காத, சொற்களால் விவரிக்க முடியாத உணர்வுகள் எழும்போது... அந்த உணர்வுகள் மனதை நிறைக்கும் போது, சொற்கள் விடை பெற்று போய்விடும், அவற்றைத் தேடித் போவது வீண் முயற்சி.

ஒரு உதாரணம் சொல்கிறேன்... நமக்கு நெருங்கிய ஒருவர் அதிக நோயுற்று கவலைக்கிடமாய் மருத்துவமனையில் இருக்கிறார். நாம் அந்த மருத்துவமனையின் ICUவுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறோம். நம் மனதில் எழும் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அப்போது அங்கு வந்து சேரும் நம் நெருங்கிய நண்பர் ஒருவர் நம் அருகில் வந்து நம் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறார். அல்லது ஆறுதலாய் நம்மை அணைக்கிறார். அவர் கண்களில் லேசாக கண்ணீர். ஒரு வார்த்தையும் பரிமாறப் படவில்லை. வார்த்தைகள் தேவையில்லை. நம் நண்பரின் அன்பு, பரிவு, ஆதரவு... எல்லாவற்றையும் அந்த மௌனத்தில் நாம் உணர்வோம். அப்படிப்பட்ட நேரங்களில் வார்த்தைகள் பேசப்படுவது கூட சரியான முறையாக இருக்காது. “இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை” அந்தத் திரைப்படப் பாடலின் அடுத்த வரிகள் இவை.
உணர்வுகளின் உச்சங்கள், பெருமலையின் சிகரங்கள் போன்றவை. உயர்ந்ததொரு மலையின் உச்சியில் நிற்கும் போது அங்கு நிசப்தம் தான் தெளிவாகக் கேட்கும். அதேபோல் உணர்வுகளின் உச்சங்களிலும் அமைதி, நிசப்தம் அதிகம் இருக்கும். வாழ்க்கையின் பெரும் பகுதிகளுக்கு, அதுவும் ஆழமான பகுதிகளுக்கு வார்த்தைகள் தேவையில்லை. மௌனமே அழகு. வாழ்வின் எதார்த்தம், உண்மை இதுதான், அன்பர்களே. இத்தனை வார்த்தைகளைக் கொட்டி இந்த உண்மையை விளக்குகிறேன் என்று என்னை நினைத்து நானே பரிதாபப்படுகிறேன்.

மனித உறவுகள், அதில் எழும் உணர்வுகள் இவைகளுக்கே வார்த்தைகள் தேவையில்லை என்றாகும் போது, இறைவனைக் காணும் போது, இறைவனை உள்ளூர உணரும் போது வார்த்தைகளைத் தேடுவது வீணான முயற்சி. ஆழ்நிலை தியானங்களில் அதிகம் தேர்ந்தவர்கள் சொல்வது இதுவே. திருப்பாடலில் இந்த அறிவுரை அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. திருப்பாடல் 46ல் ஒரு பகுதி இது:
திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 46: 8-10
வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! உலகின் கடையெல்லைவரை போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்: வில்லை ஒடிக்கின்றார்: ஈட்டியை முறிக்கின்றார்: தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார்.  
இறைவனின் செயல்களைக் கண்டதும், நாம் என்ன செய்ய வேண்டும்? நம் பதில் எப்படி இருக்க வேண்டும்? ஆரவாரமாய் அவரது புகழைப் பாடி, எக்காளம் ஒலித்து, ஊரை, உலகத்தைக் கூட்டி கடவுளின் பெருமைகளைப் பட்டியலிட்டு சொல்ல வேண்டும். அப்படித் தானே?... இல்லை. மாறாக, திருப்பாடல் ஆசிரியர் சொல்வது இது:
அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள். (திருப்பாடல்கள் 46: 10)
ஆங்கிலத்தில் இது இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. Be still, and know that I am God. (Ps. 46:10). அதாவது, ஆடாமல், அசையாமல் இரு. நானே கடவுள் என்று உணர்ந்துகொள்.
எவ்வளவுக்கெவ்வளவு கடவுளை நெருங்குகிறோமோ, அவரை உணர்கிறோமோ, அவரது செயல்களை, பெருமையை உணர்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அமைதி காப்பதே நல்ல பதில். கடவுளை, அவர் செயல்களை மக்கள் உணர வேண்டுமென ஊர்வலங்கள் நடத்தி, ஒலிபெருக்கிகளில் முழங்கி அதனால், உண்டாகும் பல வன்முறைகளைக் கண்டு வரும் நம் நாட்டில் கடவுளை அவரவர் கண்டு அமைதியில் அந்த அனுபவத்தை அசை போட்டால், மக்களிடையே இன்னும் அழகான அமைதி உருவாகும் இல்லையா?
இந்த அமைதி முதலில் நம்மிடமிருந்து ஆரம்பமாக வேண்டும். எண்ணங்களுக்கு அப்பால், வார்த்தைகளுக்கு அப்பால், ஆழ்ந்த நிசப்தத்தை வாழ்வின் ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாவது உணர்வது எவ்வளவோ நன்மைகள் தரும். ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் என்று ஆரம்பித்து, ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என்று ஒவ்வொரு நாளும் ஆழ்ந்த அமைதியைச் சுவைத்துப் பாருங்கள். முயன்று பாருங்கள்.

கடவுள் அனுபவம் எவ்வளவுதான் ஆழமானதாக இருந்தாலும், நானும் கடவுளும் என்று அந்த அனுபவத்தைத் தனிச் சொத்தாக்குவதில் அர்த்தமில்லை என்பதை இயேசு உருமாறிய இந்த நிகழ்வின் கடைசிப் பகுதி சொல்கிறது. பேசுவது என்னவென்று அறியாது "நாம் இங்கேயே தங்கி விடலாம்" என்று சொன்ன பேதுருவின் கூற்றுக்கு மேகங்களின் வழி இறைவன் சொன்ன பதில்: "என் அன்பு மகன் இவரே. இவருக்குச் செவி சாயுங்கள்." பேசுவதைக் குறைத்துக் கொண்டு, கேட்க வேண்டும். இறைவார்த்தையைக் கேட்க வேண்டும்.
 அந்த இறைவன், இறை மகன் இயேசு என்ன கூறுவார்? இங்கே தங்கியது போதும். வாருங்கள் மலையை விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம் என்று கூறுவார். கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான். ஆனால், கோவில்களிலேயே தங்கி விட முடியாது. தங்கிவிடக் கூடாது. இறைவனைக் கண்ட, இறைவனைத் தரிசித்த அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் உலகிற்குள் செல்ல வேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாதவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம். உருமாறிய கடவுளைக் கண்ணாரக் கண்ட சீடர்களை அழைத்துக் கொண்டு இறை மகன் இயேசு மலையிலிருந்து இறங்குகிறார். எதற்காக? அந்த மக்களை உருமாற்ற. மக்களை உருமாற்றும் பணியில் நாமும் இணைவோம் வாருங்கள்.







All the contents on this site are copyrighted ©.