தென்கொரிய நீதிமன்றம் மரணதண்டனைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்திருப்பது குறித்து தலத்திருச்சபை
கவலை
பிப்.26,2010 தென் கொரியாவில் மரண தண்டனை அரசியல்அமைப்பின்படி ஏற்றுக் கொள்ளக்கூடியதே
என்று அந்நாட்டு அரசியல்அமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்து தலத்திருச்சபை
தனது கவலையை வெளியிட்டுள்ளது. கொரிய நீதிமன்றம் இவ்வியாழனன்று வழங்கிய இந்தத் தீர்ப்பு
குறித்துப் பேசிய தென் கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் Boniface
Choi Ki-san, அரசு, இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் செயல்படாது என்று தான் நம்புவதாகக்
கூறினார். மேலும் இந்தத் தீர்ப்பு, இக்காலத்தின் மற்றும் உலகப் போக்குக்கு ஒத்துப்
போகவில்லை என்று, தென் கொரிய ஆயர் பேரவையின் மரண தண்டனையை இரத்து செய்வதற்கான ஆணையத்தின்
தலைவர் John Kim Hyoung-tae கூறினார். கடந்த 12க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் தென் கொரியாவில்
எந்தக் குற்றவாளிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. எனினும் தற்சமயம் 59 பேர், இத்தண்டனை
நிறைவேற்றப்படக் காத்திருக்கிறார்கள். தற்சமயம், உலகில் மரணதண்டனையை இரத்து செய்துள்ள
93 நாடுகள் உட்பட 141 நாடுகள், இத்தண்டனையைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் 56 நாடுகள் இன்னும்
அத்தண்டனையை நடைமுறைப்படுத்துகின்றன.இவ்வாறு உரோம் சான் எஜிதியோ அமைப்பின் பேச்சாளர்
Mario Marazziti, ஜெனீவாவில் நடைபெற்ற மரணதண்டனைக்கு எதிரான மூன்று நாள் உலக மாநாட்டில்
அறிவித்தார்.