2010-02-26 15:20:58

இந்தியாவில் பெரும்பாலான கத்தோலிக்க இளையோர், இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் - ஓர் ஆய்வு


பிப்.26,2010 இந்தியாவில் பெரும்பாலான கத்தோலிக்க இளையோர், திருச்சபைத் தலைவர்கள் மற்றும் மூத்தவர்கள் மீது நம்பிக்கை வைப்பதைக் காட்டிலும் இறைவன் மீது ஆழமான நம்பிக்கைக் கொண்டிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்திய திருச்சபை, அடுத்த பத்தாண்டுகளுக்கு தேசிய இளையோர்க்கான தனது திட்டத்தை வரையறுக்கும் நோக்கத்தில் இந்திய ஆயர் பேரவையின் இளையோர் ஆணையம் நடத்திய ஆய்வு இவ்வாறு கூறுகிறது.
குவஹாட்டியில் நடைபெற்று வரும் இந்திய ஆயர் பேரவை கூட்டத்தில் இவ்வாய்வு சமர்ப்பிக்கப்பட்டது. இதன், முதல் இரண்டு நாள் அமர்வுகளில் சுமார் 40 கத்தோலிக்க இளையோர் கலந்து கொண்டனர்.
தேசிய அளவில் சுமார் ஆறாயிரம் இளையோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் தங்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு ஞாயிறு திருப்பலி அவசியம் என்றும், இதே அளவிலான இளையோர், தங்களின் வாழ்க்கையில் திருநற்கருணை மையமாக இருக்கின்றது என்றும் கூறியதாகத் தெரிய வந்துள்ளது.
36 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட இளையோர், ஒவ்வொரு மாதமும் ஒப்புரவு திருவருட்சாதனத்திற்குச் செல்வதாகவும் அவ்வாய்வு கூறுகிறது.
திருச்சபைத் தலைவர்களும் மூத்தவர்களும் இளையோரின் கருத்துக்களை மதிப்பதில்லை என்று 70 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 47 விழுக்காட்டினர் 20 வயதுக்குட்பட்டவர்கள்.







All the contents on this site are copyrighted ©.