2010-02-25 16:25:13

பிப்ரவரி 26 தவக்கால சிந்தனை


RealAudioMP3 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்கள், 2000ம் ஜூபிலி ஆண்டிலே செய்த செயல்பாடுகளில் உலகத் தலைவர்கள் முதல் பொது மக்கள் வரை இனம், மொழி, நாடு கடந்து அனைவராலும் பாராட்டப்பட்ட செயல்பாடு என்னவென்றால் திருச்சபை தான் செய்த தவறுகள் அனைத்திற்காகவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட நிகழ்வே. இந்த உயரிய செயல்பாட்டை யாரும் மறுக்க முடியாது. மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதென்பது மனிதத்தில் இருக்கும் புனிதநிலை.

இன்றைய வாசகங்கள் அப்படிப்பட்ட புனிதநிலையில் வாழ நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றன.

கணவர்-மனைவி தொடங்கி பெற்றோர்-பிள்ளைகள் வரை அனத்து உறவு நிலைகளிலும் விரிசல்கள். சிறிய மனவருத்தத்தில் தொடங்கி அதுவே வேரோடு விழுதுகள் வரை விரிந்து உறவற்ற நிலைக்கு தனிமனிதரையும் சமூகத்தையும் இழுத்துச் சென்று விடுகிறது. உறவே மனிதம்; உறவே புனிதம் என்பது எழுத்தோடு மூச்சடைத்துப் போகிற அவலமான நிலை. இயேசு இன்றைய தின நற்செயதி வழியாக நம்மைப் பார்த்து வேண்டுவதெல்லாம், “உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,24 அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” (மத். 5:23-24 ) என்பதே.

அன்பர்களே, மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கத் தடையாக இருக்கும் நமது அகந்தையை வேரறுப்போம்.

உறவுக்கு உயிர் கொடுப்போம்.

மனிதத்தில் புனிதம் காண்போம்(அருள்தந்தை பவுல்ராஜ்,சே.ச.)








All the contents on this site are copyrighted ©.