2010-02-25 16:22:10

குவஹாத்தியில் ஆரம்பமான 29வது இந்திய ஆயர் பேரவையின் துவக்க விழாவில்  கர்தினால் Gracias 


பிப்.25,2010 இளையோரே இந்தியாவின் பெரும் நம்பிக்கை, நமது சக்தி என்று இந்திய ஆயர் பேரவையின் உதவி தலைவர் கர்தினால் Oswald Gracias கூறினார். "அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு இளையோர்" என்ற மையக் கருத்துடன் இப்புதனன்று குவஹாத்தியில் ஆரம்பமான 29வது இந்திய ஆயர் பேரவையின் துவக்க விழாவில் பேசிய கர்தினால் Gracias இவ்வாறு கூறினார்.
இப்புதன் முதல் ஒரு வாரம் நடைபெறும் இந்த ஆயர் பேரவையில் இந்தியாவின் 163 ஆயர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்தியாவின் தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, 40 விழுக்காடு இந்தியர்கள் 20 வயதுக்கு குறைந்தவர்கள் என்றும் இந்திய திருச்சபை தன் பணிகளில் இளையோரை அதிகமாய் ஈடுபடுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதென்றும் கர்தினால் Gracias கூறினார்.
தற்போதைய உலகம் காட்டும் வழிகள், சிறப்பாக இந்தியாவில் அதிகம் காணப்படும் ஊழல் முறைகள் இளையோரைத் தவறான பாதைகளில் இட்டுச் செல்கிறது, அதற்கு மாற்றாக, இளையோர் திருவழிபாடுகளிலும், கோவில் சார்ந்த பணிகளிலும் இன்னும் ஆர்வமாய் ஈடுபடுவது அவர்களுக்கு நல் வழிகளாக அமையும் என்று கூறினார் கர்தினால்.
இன்றைய இளையோர் தங்கள் சொந்த நலனிலும், வாழ்விலும் ஆழ்ந்து விடுவதால், சமுதாய நலனில் காட்டும் ஆர்வம் குறைந்து வருகிறதென இம்மாநாட்டிற்குத் தன் செய்தியை அனுப்பியுள்ள ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Vithayathil கூறியுள்ளார்.இளையோர் பல்சமய உரையாடல்களிலும், சமயங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்திலும் வளர வேண்டும் எனவும், இதுவே இளையோருக்காக இந்தியத் திருச்சபை செய்யும் புதிய நற்செய்தி பணி என்றும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியாவுக்கான  திருப்பீடத்தின் தலைமைச்செயலர் பேரருட்திரு Chibuike Onyeaghala  கூறினார்.







All the contents on this site are copyrighted ©.