2010-02-24 14:36:11

அனைத்துப் பயங்கரவாதத் தாக்குதல்களும் இறைநிந்தனை செயல்களும் நிறுத்தப்பட இந்திய ஆயர்கள் வேண்டுகோள்


பிப்.24,2010 அனைத்துப் பயங்கரவாதத் தாக்குதல்களும் இறைநிந்தனை செயல்களும் நிறுத்தப்பட்டு அனைவரும் அமைதிக்காக உழைக்குமாறு இந்திய ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியாவின் வடமேற்கு மாநிலமான பஞ்சாபின் Batala மாவட்டத்தில், இயேசு பீர் பாட்டிலை பிடித்துக் கொண்டு சிகரெட் புகைப்பது போன்ற அவரின் திருவுருவப்படம் ஒன்று, தெருச்சுவர்களில் பெரிய படமாக ஒட்டப்பட்டிருந்ததையடுத்து அவை அகற்றப்பட வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் வலியுறுத்தியதையடுத்து கலவரங்கள் வெடித்தன. இதில் இரண்டு பிரிந்த கிறிஸ்தவ சபையினரின் ஆலயங்களுக்குத் தீ வைக்கப்பட்டு அவை தரைமட்டமாக்கப்பட்டன. மற்றொரு ஆலயமும் சேதமாக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகத்தில் சிறியதாக இருந்த இத்தகைய இயேசுவின் படம், விளம்பரச் சுவரொட்டிகள் போன்று பெரிதாக்கப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த தெய்வநிந்தனை நடவடிக்கை குறித்தத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருப்பதோடு பஞ்சாபிலும் இந்தியா எங்கும் அமைதி இடம் பெற வேண்டுமென்று ஆயர்கள் அழைப்பு விடுத்திருப்பதாக, ஆயர் பேரவை பேச்சாளர் அருள்திரு பாபு ஜோசப் கூறினார்.இதற்கிடையே, பஞ்சாப் மாநில அரசு, சேதமடைந்த ஆலயங்களைச் சீரமைப்பதற்கு உறுதி செய்துள்ளது. மேலும், இம்மாதம் 20ம் தேதி இடம் பெற்ற இவ்வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பாக பல்சமய கூட்டம் ஒன்றும் நடைபெறவிருக்கின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.