2010-02-23 14:42:37

மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படுவதற்கு உரையாடலே சிறந்த வழி - சமயத் தலைவர்கள்


பிப்.23,2010 மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படுவதற்கு உரையாடலே ஒரே நம்பிக்கையாக இருக்கின்றது என்று அப்பகுதி சமயத் தலைவர்கள் இத்திங்களன்று கூறினர்.

மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவ-முஸ்லீம் உரையாடலை ஊக்குவிப்பது குறித்து உரோமையில் சான் எஜிதியோ பொதுநிலையினர் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட பல்சமயத் தலைவர்கள் இவ்வாறு கூறினர்.

இக்கருத்தரங்கில் பேசிய ஈராக்கின் கிர்குக் பேராயர் லூயிஸ் சாகோ (Louis Sako), நாம் சகோதரர்களாக ஒன்றிணைந்து வாழ வேண்டும் அல்லது முட்டாள்களாக ஒன்றிணைந்து அழிய வேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு குடியுரிமை ஆர்வலர் மார்ட்டின் லூத்தர் கிங் கூறியதைச் சுட்டிக் காட்டினார்.

மத்திய கிழக்குப் பகுதியில் இடம் பெறும் சண்டைகள் மற்றும் பொதுவான அரசியல் சூழலானது, அப்பகுதியில் கிறிஸ்தவர்கள் முற்றிலும் காலி செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையை பலர் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றன என்று மேலும் கூறினார் பேராயர் சாகோ.

ஈராக்கில் வருகிற மார்ச் ஏழாம் தேதி நடைபெறுவதாய்த் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல்சூழல்கள் பதட்டநிலையை உருவாக்கியிருப்பதாகவும் கிர்குக் பேராயர் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.