2010-02-23 14:43:09

திருச்சபையில் புதிதாக இணையும் மக்களை வரவேற்பதற்குப் புதிய வழிகளைக் கண்டு பிடிக்க அமெரிக்க ஆயர்கள் அழைப்பு


பிப்.23,2010 வருகிற பாஸ்காத் திருவிழிப்புத் திருவழிபாட்டின் போது கத்தோலிக்கத் திருச்சபையில் புதிதாக இணையும் விசுவாசிகளை அனைத்து கத்தோலிக்கரும் வரவேற்பதற்குப் புதிய வழிகளைக் கண்டு பிடிக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வழக்கம் போல இவ்வாண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் இணையவுள்ளதையடுத்து அந்நாட்டு ஆயர் பேரவை பத்து பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா திருவிழிப்பு திருப்பலியின் போது, திருமுழுக்கு, உறுதிபூசுதல், திருநற்கருணை ஆகிய திருவருட்சாதனங்களைப் பெற்று கத்தோலிக்கத் திருச்சபையில் இணைவோர்க்கானச் சிறப்புத் தயாரிப்புகள் இத்தவக்காலத்தில் இடம் பெற்று வருகின்றன.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, ஒவ்வொரு விசுவாசியும் தனது சாட்சிய வாழ்க்கை மூலம் புதியவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க முடியும் என்றும் கூறியுள்ளது.

மேலும், ஒவ்வொரு விசுவாசியும் புதிதாகச் சேருவோரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்காக இப்பொழுதிலிருந்தே செபிக்குமாறும் அவ்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.