2010-02-22 16:31:44

கருவறைக் கற்றுத்தரும் மொழி ( உலக தாய்மொழி தினம்


பிப்.22,2010 கடந்த வாரத்தில் உரோமையில் புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பம் ஒன்றில் எட்டு மாதக் குழந்தைக்குத் திருநீராட்டு விழா நடைபெற்றது. அதற்கு சிலத் தமிழ்க் குடும்பங்களும் சில உள்ளூர் ஆட்களும் வந்திருந்தனர். நம்ம பாஷையில சொல்லனும்னா சில வெள்ளைக்காரங்களும் வந்திருந்தாங்க. ஜெர்மனி மற்றும் இத்தாலியில் மறைப்பணி செய்யும் ஒருசில தமிழ்க் குருக்களும் அதில் கலந்து கொண்டனர். கோவில் வழிபாடு முடிந்து அனைவரும் சைன உணவகம் ஒன்றில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சிறுவர் சிறுமியர் இத்தாலி மற்றும் ஜெர்மன் மொழிகளில் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள். அப்போது ஜெர்மனியிலிருந்து வந்திருந்த தமிழ்க்குரு கொஞ்சம் கவலையோடு சொன்னார் – “நாம் எந்த நாட்டில் வாழ்கிறோமோ அந்த நாட்டின் மொழியை நன்றாகக் கற்றுக் கொண்டு பேச வேண்டும். அப்போதுதான் நாம் குடியேறிய நாட்டில் அந்நியராக உணர மாட்டோம். அதேசமயம் நாம் வாழ்க்கையில் முன்னேறவும் அது உதவும். ஆனால் நமது தமிழ் மக்கள், வாழும் இந்த நாட்டின் மொழியைச் சரியாகப் பேசுவதில்லை, தமிழிலேதான் பேசுகிறார்கள். இந்த நாட்டில் நிரந்தரமாகத் தங்கும் இவர்களுக்கு இந்த நாட்டின் மொழியும் முக்கியம்” என்று. இவர் சொன்னது எனக்குமே சரியெனப்பட்டது. அப்போது, "நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ, அந்த நாட்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும்'' என்று ஒருமுறை அறிஞர் அண்ணா மலேசியாவில் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

ஒருமுறை புகழ்பெற்ற இட்டிஷ்(Yiddish) எழுத்தாளர் ஒருவர் சொன்னார்- “உலகிலேயே மிக எளிதான மொழி இட்டிஷ்தான்” என்று. இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் இட்டிஷ் அவரது தாய் மொழி. ஒரு மொழி எவ்வளவு கடினமான மொழியாக இருந்தாலும், அது ஒருவரது தாய் மொழியாக இருந்து விட்டால் அது அவருக்கு எளிதான மொழியாகவே இருக்கிறது. பலமொழி கற்பவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கலாம். வலைத்தளத்தில் தமிழன்பர் ஒருவர், தாய்மொழி குறித்தத் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இரண்டாயிரமாம் ஆண்டில் நடைபெற்ற அகில உலக பெண் தொழிலதிபர்கள் மாநாட்டில் அவர் ஒரு மொழி பெயர்ப்பாளராகச் சென்றிருக்கிறார். அங்கு அவர் மொழியாக்கம் செய்த ஆங்கில உரையை அவரை வாசிக்கச் சொல்லவில்லையாம். மாறாக, அது ஒரு பிரிட்டிஷ் பெண்ணிடம் கொடுக்கப்பட்டதாம். அவர் எழுதியதை அந்தப் பெண் வாசிக்க வாசிக்கத் தான் அப்படியே உறைந்து போனதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் சொல்கிறார் – அந்தப் பெண் எவ்வளவு அழகாகப் படித்தார்! நான் உருவாக்கிய வார்த்தைகளை எவ்வளவு அழகான ஏற்ற இறக்கங்களுடன் உச்சரித்தார்! என்ன இருந்தாலும் அது அவரது தாய் மொழி அல்லவா? என்று.

இந்த உரோமை மாநகரில் உலகமே குடியேறிவிட்ட ஒருவித பிரம்மை பலநேரங்களில் ஏற்படுவதுண்டு. முக்கிய சாலைகளில் செல்லும் பொழுதும் மாநகரப் பேரூந்துகளில் பயணம் செய்யும் போதும் இந்த உணர்வு அடிக்கடி ஏற்படும். மக்கள் தங்களது தாய்மொழி பேசும் ஆட்களைக் கண்டுவிட்டால் அவர்கள் முகத்தில் தெரியும் பூரிப்பு இருக்கே.. ஆஹா.. என்று நமது மனது புளங்காகிதம் அடையும். உடனே ஏதாவது இரண்டு வார்த்தையானாலும் பேசி விடுவார்கள். ஏங்க நீங்க இந்தியாவா? அப்ப இந்தியாவுல எங்க? என்றுதான் முதல் கேள்வி விழும். இலங்கை என்றால் நீங்க தமிழா? என்றுதான் கேட்கத் தோன்றும். இந்த நாட்டில் எத்தனை தொலைகாட்சி சேனல்களில் எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும் நமது தாய்மொழியான தமிழில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே தனி இன்பம்தான். உண்மைதான். தாயின் கருவிலும் தாயின் மடியிலும் கற்ற மொழிக்கு அவ்வளவு மதிப்பு, அத்தனை புகழ்.

அன்பு நேயர்களே, பிப்ரவரி 21ம் தேதி இஞ்ஞாயிறன்று நாடுகளில், உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டது. குறிப்பாக, பங்களாதேஷில் இத்தினத்தின் நிகழ்வுகளில் ஒன்றாக அந்நாட்டுப் பிரதமர் Sheikh Hasina, தலைநகர் டாக்காவில் சர்வதேச தாய்மொழி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். உலகின் அனைத்து மொழிகளையும் பாதுகாத்து, ஆய்வுகள் நடத்தி அவை பரவுவதற்கு உதவுவதே இந்நிறுவனத்தின் நோக்கம், இதற்கு உலகினரின் ஒத்துழைப்பு அவசியம் என்று திறப்பு விழாவில் ஹசினா உரையாற்றினார். இவ்வுலக தினம் பங்களாதேஷில் இவ்வளவு ஆடம்பரத்துடன் கொண்டாடப்படுவதற்கு காரணம் இருக்கின்றது. இந்த மக்களுக்கான தேசிய அங்கீகாரம் கிடைப்பதற்கு இவர்களின் இந்தப் போராட்டமே காரணமாக இருந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டில், வங்காளம், பெருவாரியான மதத்தவரின் அடிப்படையில் இரண்டாகப் பிரிந்தது. மேற்கு பகுதி இந்தியாவுடனும், கிழக்குப் பகுதி பாகிஸ்தானுடனும் இணைந்தன. இது கிழக்கு பாகிஸ்தான் என்றும் அழைக்கப்பட்டது. எனினும், மேற்கு பாகிஸ்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தானுக்குமிடையே பொருளாதார, கல்வி மற்றும் மொழிப் பிரச்சனைகள் இருந்து வந்தன. பாகிஸ்தானை உருவாக்கிய Governor General Mohammad Ali Jinnah, 1948ம் ஆண்டு மார்ச் 24 ம் தேதி Curzon அறையில், உருது மொழியே பாகிஸ்தானின் ஒரே தேசிய மொழி என்று அறிவித்தார். அதனால் பெங்காலி மொழி பேசும் கிழக்குப் பாகிஸ்தானில் கலவரங்கள் வெடித்தன. அரசு கிளர்ச்சிகளை உடனடியாகத் தடை செய்த போதிலும், 1952ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி, டாக்கா பல்கலைகழக மாணவர்களும் மற்றவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்று மாலை போராட்டத்தினர் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர். தங்களின் தாய்மொழியைப் பயன்படுத்துவதற்குத் தங்களுக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்ட அம்மாணவர்கள் போராடிய போது இறந்தனர்.

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ, உலகில் பன்மொழிப் பண்பையும் கலாச்சாரங்களையும் மொழித்திறனையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் அந்நிறுவனத்தின் பொது அவை, சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை 1999ம் ஆண்டில் நிறைவேற்றியது. பங்களாதேஷில் தாய்மொழிக்காக மாணவர்கள் உயிர் துறந்த பிப்ரவரி 21ம் தேதியையே அவ்வுலக தின நாளாகவும் அறிவித்தது. அதன்படி இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், ஐ.நா.பொது அவையும் 2008ம் ஆண்டை சர்வதேச மொழிகள் ஆண்டு என அறிவித்து, இந்த உலக தினத்தை அங்கீகரித்தது. மேலும், இந்த யுனெஸ்கோ நிறுவனம், 2010ம் ஆண்டை கலாச்சாரங்கள் குறித்து நன்மதிப்பை ஊக்குவிக்கும் ஆண்டாகக் கடைபிடித்து வருகிறது. எனவே இந்த 2010ம் ஆண்டின் தாய்மொழி தினம், இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து, இத்திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் யுனெஸ்கோவின் தலைமையகம் அமைந்துள்ள பாரிசில் நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றன.

பேச்சாற்றல் என்பது மனிதனிடம் இருக்கின்ற அற்புத சக்தி. இது மனிதனை ஏனைய விலங்குகளிலிருந்து வேறுபடுத்தி அவனுக்கென்று ஒரு தனித்துவத்தைக் கொடுக்கிறது. இந்தப் பேச்சாற்றலுக்கு மொழி முக்கியமானது. சமூகக் கட்டமைப்புக்களின் நிலையான உறுதித் தன்மைக்கு, இந்த மொழியின் நிலைகுலையாத இருப்பும் அவசியம். இதற்கு, தாய்மொழி என்னும் ஒருவருடைய உணர்வுமொழிகள் இன்றியமையாதவை. பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் மொழியறிவுதான் தாய் மொழி.

“தாயின் கருவில் வளரும் ஒரு சிசு, கடைசி மூன்று மாதங்கள் மொழியை அறிகின்றதாம். ஒரு தாய், அதிக நேரம் தன் தாய் மொழியில் பேசுவது சிசுவின் மூளையில் பதியுமாம். அதனால்தான் குழந்தைக்கு சில மாதங்களிலேயே தாய் மொழி எளிதில் பேச வருகிறது”. இவ்வாறு ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், பிரிட்டன் விஞஞானிகள், குழந்தைகள் தாய்மொழியில் அழுவதாகவும், மகப்பேறின் கடைசி மாதத்தில் கருவில் இருக்கும் குழந்தை, தாயின் குரலையும் தாய் மொழியையும் கற்றுக் கொள்வதாகவும் கண்டுபிடித்துள்ளார்கள். மேலும், தட்பவெப்பநிலை, உணவுமுறை, மண்வளம் ஆகியவற்றுக்கு ஏற்ப உண்டான தாடையமைப்பு, நாக்கசைவு, உதடு மற்றும் பற்களின் உறுதி ஆகியவை மொழியின் ஒலி மற்றும் ஓசைநயத்தைத் தீர்மானிக்கின்றன.

இன்று உலகிலுள்ள 6912 மொழிகளில் 516, ஏறத்தாழ அழியும் நிலையில் இருக்கின்றது என்று செய்தி குறிப்பு ஒன்று கூறுகிறது. சில தமிழ்த் தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்கும் போது, தமிழ்மொழியும் அழியும் பட்டியலில் இருக்கின்றதோ என்று கவலைப்பட வைக்கின்றது. தமிழக நிதி அமைச்சர் க.அன்பழகன் கடந்த ஆண்டில் ஒரு மாநாட்டில், “மற்றவர்களைவிட தமிழர்களுக்கு தாய்மொழி உணர்வு குறைவு. தமிழர்கள் சிறுபான்மையாக இருக்கும் இடங்களில் தாய்மொழி உணர்வோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் சீரழிந்த தமிழர்களாக இருக்கிறார்கள்” என்று கூறியதாக தமிழக நாளேடு ஒன்றின் செய்திக்குறிப்பில் இருந்தது. இது உண்மையாயின், தாய்மொழியை விட்டு விலகி வருவதற்குக் காரணங்கள் என்ன நேயர்களே?

கோமல் சுவாமிநாதன் என்பவர் குறிப்பிட்டிருப்பதை இங்கு சொல்லியாக வேண்டும். “ஆங்கிலத்தைப் பேசுபவர்கள் எல்லாம் அறிவாளிகள் என நினைத்தால் இங்கிலாந்தில் தெருசுத்தம் செய்பவர்கூட நம்மைவிட புத்திசாலி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று. ஆனால் இன்று பிள்ளைகள் தங்களை, மம்மி டாடி என்று அழைப்பதையே பல தமிழ்ப் பெற்றோர் விரும்புவதைக் காண முடிகின்றது. உலகத் தாய்மொழியே “அம்மா” என்று ஆரம்பிப்பதாகத்தான் சொல்கிறார்கள். சந்திராயன் விண்கோள் திட்ட இயக்குநர் அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், ”தாய்மொழியில் தொடக்கக் கல்வியைப் படித்தால் குழந்தைகளின் மன இறுக்கம் குறையும். முதல் 5 வருடங்கள் குழந்தைகளைத் தமிழில் படிக்க வையுங்கள். அப்போது தான் உணர்தல் என்பது எளிதாக வரும்” என்று கூறியுள்ளார். நெய்வேலி இந்திய பொறியாளர் கழகம், பொறியாளர் அறிவியலாளர் கழகம் மற்றும் கோவை அரசு தொழிற் நுட்ப கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நெய்வேலியில் நடந்த இந்திய இளைஞர்களுக்கான சந்திராயன்-1 என்ற சிறப்பு கலந்தாய்வு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

“நான் தமிழைக் கற்றுக் கொள்ளாமல் போய்விட்டேனே” என்று காந்திஜி வருத்தப்பட்டாராம். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்று கவிஞன் பாடினான். இத்தகைய பெருமையும் இனிமையும் பழமையான வரலாறும் கொண்ட நம் தாய்மொழியின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்வோம். “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்பதை உலகில் நிலைநாட்டுவோம். தமிழன் என்பதற்காகவே மனிதத்தை இழந்து, முகவரியை தொலைத்து வாடும் தமிழரின் மாண்பும் உரிமைகளும் நிலைநாட்டப்பட்டும் என விழைவோம்.

நேயர்களே, இப்படிச் சொல்வதால் பிற மொழிகளுக்கு நாங்கள் எதிரிகளே அல்ல. பிறமொழிகளில் புலமை அடைவது காலத்தின் கட்டாயம். இந்தக் கதை தெரியுமா? ஒரு சமயம், ஒரு தாய் எலி தனது மூன்று குட்டிகளுடன் அந்த வீட்டு சமையல் அறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பூனை அடுப்பறைச் சுவரின் சந்து வழியாக எட்டிப் பார்த்து அந்த எலிகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. இதைக் கவனித்தத் தாய் எலி, “ஊஃப், ஊஃப்” என்று நுரையீரலை இழுத்துக் கொண்டு துவாரத்தைப் பார்த்து உரக்கக் கத்தியது. இதைக் கேட்ட பூனை பயந்து ஓடிவிட்டது. உடனே தாய் எலி, பிள்ளைகளிடம், இன்னொரு மொழியைத் தெரிந்து கொள்வது எவ்வளவு நல்லது பார்த்தீர்களா? என்றது.

இறுதியாக ஒரு சொல். மொழிகளில் உயர்வு தாழ்வு என்பது இல்லை. அது நம் எண்ணத்தை அப்படியே பரிமாற உதவும் சாதனம். நாம் பேசுகிற மொழியைக் காட்டிலும் நாம் யாரிடம் சாதிக்க விரும்புகிறோமோ அவரது மொழி முக்கியமானதாக இருக்கிறது. எனவே மொழியால் இனத்தால் யாரையும் வேற்றுமை பாராது அனைவரையும் மனிதர்களாக, மாண்புள்ளவர்களாக மதித்து வாழ்வோம்.

 








All the contents on this site are copyrighted ©.