2010-02-20 16:24:39

விமான நிலையப் பணிகளில் மனிதன் மையப்படுத்தப்பட வேண்டும்- திருத்தந்தை


பிப்.20,2010 விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் வேலை செய்வோரின் பலவகையான பணிகள் மற்றும் திட்டங்கள் ஒவ்வொன்றிலும் மனிதன் மையப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை.
இத்தாலிய தேசிய விமானப் பணியாளர் அமைப்புகளின் சுமார் ஆறாயிரம் பேரை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் உண்மையிலேயே குறிப்பிடும்படியானவை என்றார்.

விமானப் போக்குவரத்துக்களைச் சீரமைப்பது, அவற்றைக் கண்காணிப்பது, நாட்டின் சர்வதேச உடன்பாடுகளுக்கு ஒத்தவகையில் தேசிய போக்குவரத்து அமைப்புக்கு உதவுவது, பாதுகாப்பான விமானப் பயணங்களுக்கு உதவுவது, விமான நிலையங்களில் உரிமைகள், தரமான பணிகள், சுற்றுச்சூழல் போன்றவற்றில் கவனம் செலுத்துவது என அவர்களின் பலவகையான பணிகளைச் சுட்டிக் காட்டினார் அவர்.
இக்காலத்தில் விமான நிலையங்கள் மனித சமுதாயத்தின் பன்மைத்தன்மையை காட்டும் இடங்களாக மாறி வருகின்றன, இன்ப துன்ப நிகழ்வுகளுக்காகச் செல்வோர், அகதிகள், குடியேற்றதாரர், சிறார், முதியோர், நோயாளிகள் எனப் பலவகைப்பட்ட மக்கள் பலவகை உணர்வுகளுடன் அங்கு செல்வதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
திருத்தந்தையர்கள் நற்செய்திப் பணிக்கும் இன்றியமையாத கருவியாகத் தற்சமயம் விமானம் மாறியுள்ளது என்றுரைத்தத் திருத்தந்தை, இப்பணியாளர்களுக்குத் தமது நன்றியையும் தெரிவித்தார்.
விமான நிலையங்களில் திருச்சபையின் மேய்ப்புப்பணியின் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொன்ன திருத்தந்தை, விமானப் பணியாளர்களுக்குப் பாதுகாவலியான லொரேத்தோ அன்னைமரியிடம் இவர்களின் பணிகளையும் அனைத்துத் திட்டங்களையும் அர்ப்பணிப்பதாகவும் கூறினார்.1920ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி திருத்தந்தை 15ம் பெனடிக்ட், லொரேத்தோ அன்னைமரியை விமானப் பணியாளர்களுக்குப் பாதுகாவலியாக அறிவித்தார் என்பதையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த இத்தாலியக் குழுவிடம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.