2010-02-20 16:24:28

லெபனன் பிரதமர், திருத்தந்தை சந்திப்பு


பிப்.20,2010 லெபனனில் பல்வேறு சமயக் குழுக்களின் எடுத்துக்காட்டான வாழ்வு, மத்திய கிழக்குப் பகுதி மற்றும் உலகமனைத்திற்கும் ஒரு செய்தியாக அமைய முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்
லெபனன் நாட்டுப் பிரதமர் சாட் ராபிக் ஹரிரியை (Saad Rafic Hariri) இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்துப் பேசிய திருத்தந்தை, லெபனன் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியின் நிலைமை குறித்து கலந்து பேசினார் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மத்திய கிழக்குப் பகுதியின் பிரச்சனைகளுக்கு நீதியும் புரிந்துணர்வும் கொண்ட தீர்வு காணப்படுமாறு கேட்டுக் கொண்ட திருத்தந்தை, நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பதற்குப் பல்சமய மற்றும் பல கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடல் இடம் பெற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார்.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மாம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ஹரிரி.
லெபனனில் கத்தோலிக்கத் திருச்சபையின் உயிர்த்துடிப்பான பிரசன்னத்தைப் பாராட்டிய அதேவேளை, அது, சமுதாயத்திற்கு ஆற்றும் பணிகளைக் குறிப்பாக, கல்வி, சுகாதாரம் மற்றும் நலப்பணிகள் குறித்தும் புகழ்ந்து பேசினார் பாப்பிறை.
வருகிற அக்டோபர் 10 முதல் 24 வரை நடைபெறவிருக்கும் மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மன்றம் பற்றியும் திருத்தந்தை குறிப்பிட்டார்.இவ்வெள்ளியன்று இத்தாலிக்கானச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய ஹரிரி, இச்சனிக்கிழமை வத்திக்கானில் திருத்தந்தை சந்தித்தார்.







All the contents on this site are copyrighted ©.