2010-02-17 15:22:32

மனம் வருந்துவதன் மூலம் விசுவாசிகள் மத்தியில் நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டியது ஆயர்களின் கடமை - அயர்லாந்து பிதாப்பிதா


பிப்.17,2010 மனமாற்றத்திற்கு அழைப்புவிடுக்கும் இத்தவக்காலத்தில் அயர்லாந்து நாட்டில் மனங்களில் மாற்றம் இடம் பெறுவதற்கு ஆயர்கள் உழைக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பிதாப்பிதா கர்தினால் ஜான் பிராடி கூறினார்.
கடந்த நாற்பது வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தில் அயர்லாந்து திருச்சபையில் இடம் பெற்றுள்ள பாலியல் மீறல்கள் விவகாரம் குறித்து திருத்தந்தை, திருப்பீட அதிகாரிகள் மற்றும் 24 அயர்லாந்து ஆயர்கள் வத்திக்கானில் நடத்திய இரண்டு நாள் கூட்டம் பற்றி இச்செவ்வாய் மாலை நிருபர் கூட்டத்தில் விளக்கிய கர்தினால் பிராடி இவ்வாறு தெரிவித்தார்.
அயர்லாந்து திருச்சபையில் ஏற்கனவே நிலவும் அமைப்பு முறைகளை, குறிப்பாக, மறைமாவட்ட மற்றும் பங்குத்தள அவைகளை இன்னும் சிறந்த விதத்தில் செயல்பட வைக்க வேண்டியதன் அவசியத்தையும் கர்தினால் எடுத்துச் சொன்னார்.
செய்த தவறுகளுக்கு இத்தவக்காலத்தில் மனம் வருந்துவதன் மூலம் விசுவாசிகள் மத்தியில் நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டியது ஆயர்களின் கடமை என்பதையும் அயர்லாந்து பிதாப்பிதா சுட்டிக் காட்டினார்.
தலத்திருச்சபையை நடத்துவதில் பொதுநிலை விசுவாசிகளின் நேரடி ஈடுபாட்டை மேலும் அர்த்தமுள்ளதாகவும், முழுமையானதாகவும் ஆக்குவதற்கு இந்த அமைப்பு முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும்
வத்திக்கானில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தின் ஏறத்தாழ எல்லா அமர்வுகளுக்கும் திருத்தந்தை வருகை தந்து ஆயர்களாகிய தஙகளுக்குத் தனது முழு ஆதரவையும் அளித்தார் என்றும் இந்நிருபர் கூட்டத்தில் கர்தினால் கூறினார்.அயர்லாந்து ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் பிராடி தலைமையில் நடைபெற்ற இந்நிருபர் கூட்டத்தில் அந்நாட்டின் ஐந்து பேர் அடங்கிய ஆயர் குழு கலந்து கொண்டு விளக்கியது.







All the contents on this site are copyrighted ©.