2010-02-16 17:05:06

திருத்தந்தை:அருட்பணியாளர்கள் மற்றும் துறவிகளின் சாட்சிய வாழ்வு இறையழைத்தல்களுக்குத் தூண்டுகோலாக அமைகின்றது


பிப்.16,2010 ஏற்கனவே கிறிஸ்துவின் அழைப்புக்குப் பதில் அளித்துள்ள குருக்களும் துறவியரும் தங்களுடைய சொந்த சாட்சிய வாழ்வு மூலம் மற்றவர்கள் தங்களின் இறையழைத்தலுக்குத் தாராளமாகப் பதில் சொல்வதற்குத் தூண்டுகோலாக இருக்கிறார்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

வருகிற ஏப்ரல் 25ம் தேதி கடைபிடிக்கப்படும் 47வது உலக இறையழைத்தல் தினத்திற்கென இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட திருத்தந்தையின் செய்தியில், குருத்துவ வாழ்வுக்கு உறுதியுடன் சாட்சியம் பகரக்கூடிய முக்கிய கூறுகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இறையழைப்புக்கு பதில் அளித்துள்ள குருக்கள் மற்றும் துறவியரின் சான்றுபகரும் வாழ்வு, இறையழைத்தல்களை ஊக்குவிப்பதில் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன என்றும் இது, பெரும்பாலும் தனது சாட்சிய வாழ்வு மூலம் கற்பித்த ஆர்ஸ் நகர புனித ஜான் மரிய வியான்னியின் வாழ்க்கையில் தெளிவாகத் தெரிகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

“சாட்சிய வாழ்வானது இறையழைத்தல்களைத் தட்டி எழுப்புகின்றது” என்ற இவ்வுலக தினத்தின் கருப்பொருளை மையப்படுத்திச் சிந்தனைகளை வழங்கியுள்ள திருத்தந்தை, கடவுளின் சுதந்திரமான மற்றும் அருள்நிறைந்த முன்னெடுப்பு, அவரின் அழைப்பை ஏற்ற அனைவரும் தங்களின் சாட்சிய வாழ்வு மூலம் அவரது இறையழைப்புக்கு கருவிகளாகச் செயல்படுவதற்கான மனிதப் பொறுப்புக்குச் சவாலாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

இருபால் துறவியர் நற்செய்திக்கு முழுவதும் விசுவாசமாக இருந்து அதனைத் தம் வாழ்க்கையில் கடைபிடிக்கும் பொழுது உலகில் அவர்களின் இருப்பு கிறிஸ்துவின் அன்பைப் பற்றிப் பேசுவதாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இறைமக்களின் பணிக்கெனக் புதிய குருத்துவ மற்றும் துறவற அழைத்தல்களைத் தட்டி எழுப்புவதற்கெனத் தங்களின் மறைப்பணிக்கு விசுவாசமாக இருக்கும் குருக்களை நம் ஆண்டவர் பயன்படுத்துகிறார், இது இன்றும் திருச்சபையில் நடந்தேறுகிறது என்றும் அச்செய்தி கூறுகிறது.

அருட்பணியாளர்கள் மற்றும் துறவிகளின் இந்தச் சாட்சிய வாழ்வு சாரமுள்ளதாக அமைவதற்கு மூன்று அடிப்படைக் கூறுகளையும் அச்செய்தியில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கிறிஸ்துவுடன் நட்பு, கடவுளுக்குத் தன்னையே முழுவதுமாகக் கொடையாக அர்ப்பணித்தல், ஒன்றித்த வாழ்வு ஆகிய மூன்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோருக்கு இன்றியமையாதவை என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பயணம் செய்யும் திருச்சபையின் மந்தையை ஒன்று சேர்க்கும் பண்பை குருக்கள் கொம்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

2005ம் ஆண்டு ஜூலையில் இத்தாலியின் அவுஸ்தாவில் குருக்களிடம் கூறியது போல, வருத்தமான மற்றும் ஒதுங்கியிருக்கின்ற குருக்களைப் பார்க்கும் இளையோர், அவர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுவது கடினம், மாறாக குருவாய் இருப்பதன் அழகை வெளிப்படுத்தும் குருவின் ஒன்றித்த வாழ்வு இளையோருக்குத் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.