வீடற்றவர்க்கான உரோம் காரித்தாஸ் அமைப்பின் மையத்திற்குத் திருத்தந்தை செல்கிறார்
பிப்.13 2010 உரோம் மறைமாவட்டம் நடத்தும் வீடற்றவர்க்கான காரித்தாஸ் அமைப்பின் மருத்துவ
மையம், தங்கும் விடுதி மற்றும் உணவு மையத்தை இஞ்ஞாயிறன்று பார்வையிடுகிறார் திருத்தந்தை.
உரோம்
மத்திய இரயில் நிலையத்துக்கு அருகில் அமைந்திருக்கின்ற இம்மையத்திற்குச் செல்லும் திருத்தந்தை,
மருத்துவர்கள், தாதியர், தன்னார்வப் பணியாளர்கள் என 300க்கும் அதிகமானோரைச் சந்தித்து
உரையாற்றுவார்.
இந்நிகழ்வில் உரோம் நகர மேயர், உரோம் மறைமாவட்ட குருகுல முதல்வர்
கர்தினால் அகுஸ்தீனோ வல்லினி உட்பட பல தலைவர்களும் கலந்து கொள்வார்கள்.
உரோம்
மறைமாவட்டத்தின் காரித்தாஸ் அமைப்பானது, நகரத்தில் நான்கு உணவு மையங்களை நடத்துகின்றது.
இவற்றில் தினமும் சுமார் 1300 வீடற்றோர் உணவு அருந்துகின்றனர். மேலும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கென
தங்கும் விடுதியையும், ஏழைகள் குறைந்த விலையில் பொருட்களைப் பெறுவதற்கு உதவியாகக் கடை
ஒன்றையும் நடத்தி வருகிறது.
உதவி கேட்டு வருகிறவர்களின் எண்ணிக்கை அண்மை ஆண்டுகளில்
இருபது விழுக்காடு அதிகரித்து இருப்பதாக இத்தாலிய காரித்தாஸ் அமைப்பு அறிவித்தது.
“வறுமையையும்
சமூகத்தில் தனிமைப்படுத்தப்படும் நிலையையும் அகற்றுவதற்கான” ஆண்டாக இந்த 2010ம் ஆண்டு
ஐரோப்பாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி ஏழ்மையின் அடிப்படைக் காரணத்தை வேரோடு
களைந்தெறிய நாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஐரோப்பிய காரித்தாஸ் “பூஜ்யம் வறுமை” என்ற
தலைப்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.