2010-02-13 16:14:25

பிப்ரவரி 14 - நாளும் ஒரு நல்லெண்ணம் , ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
அன்புள்ளங்களே,  இன்று நாளும் ஒரு நல்லெண்ணத்தையும் ஞாயிறு சிந்தனையையும் இணைத்து அளிக்க விரும்புகிறேன். ஏன் இந்த மாற்றம்? இன்று பிப்ரவரி 14 அதனால்...
Valentine's Day அல்லது காதலர் தினம் என்று அழைக்கப்படும் இந்த நாளைப் பற்றி நான் பேசவில்லையென்றால், நான் ஏதோ வேறு ஒரு உலகத்தில், வேறு ஒரு கோளத்தில் இருந்து வந்தவன் என்று கூட நீங்கள் நினைக்க வாய்ப்புண்டு. ஏனெனில், பிப்ரவரி 14 அவ்வளவு புகழ் பெற்ற ஒரு திருவிழாவாக மாறிவிட்டது.
மனித வாழ்வில் திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் கட்டாயம் தேவை. இவைகள் இல்லாத மனித வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால், எதற்கு திருவிழா, ஏன் கொண்டாட்டம் என்பதை உணர்வது நல்லது. அதுவும் அண்மைக்காலங்களில் மிகவும் பிரபலமாகி இருக்கும் இந்த நாளின் காரண, காரியங்களைப் பற்றி சிந்திப்பது மிகவும் நல்லது.

நான் சிறுவனாக இருந்த போது கொண்டாடப்பட்ட விழாக்களைப் போல் இப்போது குறைந்தது ஐந்து மடங்கு திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன. திருவிழாக்கள், அதனால் உண்டாகும் மகிழ்வு இவற்றிற்கு நான் எதிரி அல்ல. ஆனால், இந்த விழாக்களை வியாபார உலகம் ஒவ்வொரு ஆண்டும் அதிகமதிகமாக ஆக்கிரமித்து வருகிறதென்பதும்,  பல புதிய விழாக்களை வியாபார உலகம் ஆரம்பித்துள்ளதென்பதும் கவலை தரும் போக்கு.
வியாபார உலகத்தின் ஆக்கிரமிப்பு எப்படிபட்டது? வீடுகளிலும், கோவில்களிலும், ஊரின் பொது இடங்களிலும் கொண்டாடப்பட்டு வந்த விழாக்கள் இப்போது, supermarket அல்லது maal களிலும், உணவு விடுதிகள், டிஸ்கோ இடங்கள் என்று வியாபாரத் தலங்களிலும் அதிகம் கொண்டாடப்படுகின்றன. விழாக்களின் உள் அர்த்தங்களை சிந்திக்க விடாமல், மேல் பூச்சுக்களில் நம்மை மயங்க வைத்து, இந்த மேல் பூச்சுக்கள்தாம் விழாக்களின் மையப்பொருள் என்று சொல்லும் அளவுக்கு விழாக்களை வியாபார உலகம் மாற்றிவிட்டதென்பதை ஓரளவாகிலும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
பிப்ரவரி 14 விழாவுக்கு இன்னொரு தனி சிறப்பு உண்டு. கடந்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளாக இந்தியாவில் இந்த விழாவைக் குறித்த காரசாரமான விவாதங்கள், பல வன்முறை கலந்த கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த விவாதங்கள் நல்ல விதமாக, அறிவு பூர்வமாய் நடந்தால், இந்த விழாவைப்பற்றிய உண்மைகள், உள் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும். ஆனால், இந்த கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றையும்  நம் தொடர்பு சாதனங்கள்  ஒரு நாடகம் போல காட்டுவதால், இந்த விழாவை தேவைக்கும் அதிகமாக புகழ் உச்சிக்கு இவை கொண்டு சென்று விட்டனவோ என்று எனக்கு கலக்கமும் உண்டு. இந்த நாடகங்களை நாம் பார்த்து ரசிக்கிறோம், கை தட்டுகிறோம்... ஆனால், விழாவின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் போய்விடுகிறோம் என்றே நினைக்கிறேன். இந்த விழாவைப் பற்றி கொஞ்ச நேரமாகிலும் சிந்திக்க, இந்த நிகழ்ச்சி வழியாக உங்கள் சிந்தனைகளை ஆரம்பித்து வைக்க நினைக்கிறேன்.

ஒரு கற்பனைக் கதை அல்லது உவமையோடு என் சிந்தனைகளை ஆரம்பிக்கிறேன். ஒருவர் ஒரு கார் வாங்கினார். கார் வாங்கியதால், ஒரு TV இலவசமென்று அவருக்கு டிவி வழங்கப்பட்டது. அவர் வாங்கிய காரை வீட்டுக்கு ஓட்டிச் செல்லாமல் அங்கேயே விட்டு விட்டு, இலவசமாக கொடுக்கப்பட்ட டிவியை மட்டும் வீட்டுக்கு எடுத்துச் சென்று, வீட்டில் வைத்து அழகு பார்த்தார். இவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இன்னொருவருக்கு, அவரது நண்பர் அதிக விலையுயர்ந்த, அழகான ஓவியம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். அந்த ஓவியம் ஒரு காகிதத்தில் சுற்றப்பட்டிருந்தது. பரிசைப் பெற்றவர், அந்த விலையுயர்ந்த ஓவியத்தைப் பக்கத்திலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, பரிசு சுற்றப்பட்டிருந்த காகிதத்தை எடுத்து ரசித்தார். அதை சட்டமிட்டு தன் வீட்டில் மாட்டினார். இவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நினைக்க என்ன இருக்கிறது? இருவரும் சுய நினைவை, சுய சிந்தனையை இழந்தவர்கள் என்று சொல்லமாட்டோமா? சொல்வோம். ஆனால், அதே போல் நாம் எத்தனை முறை நடந்திருக்கிறோம்? மையங்களை ஒதுக்கி விட்டு, ஓரங்களில் நம் கவனங்கள் நின்று விடவில்லையா? ஓரங்களைப் பெரிதுபடுத்தி, ஓரங்களுக்கு மாலையிட்டு, மரியாதைகள் செய்து ஓரங்களை மையங்களாக்கவில்லையா?
நாம் கொண்டாடும் பல திருநாட்களில் மையங்களும் ஓரங்களும் இடம் மாறிவிட்டன. யார் இந்த மாற்றத்தைச் செய்தது? நான் ஏற்கனவே கிறிஸ்மஸ் காலத்தில் ஒரு சிந்தனையில் பகிர்ந்து கொண்டதைப் போல், நம் வியாபார உலகம் இந்தத் திருநாட்களின் உண்மையான அர்த்தங்களை மையங்களிலிருந்து ஓரத்திற்கு ஒதுக்கி விட்டு, அந்த வியாபார உலகம் உருவாக்கிய ஓரங்களை... அதாவது, மலர்கள், வாழ்த்து அட்டைகள், அலங்காரங்கள், பரிசுப் பொருட்கள் என்ற இந்த ஓரங்களை மையத்திற்குக் கொண்டு வந்து கொலுவேற்றிவிட்டது. திருநாட்கள் வழியாக நமக்கு வந்து சேரும் அர்த்தங்கள் எனும் பரிசுகள் குப்பைக்குப் போய்விட்டன. அந்தத் திருநாட்களில் வாங்கப்படும் பல்வேறு பொருட்கள் என்ற அந்த பரிசு சுற்றப்பட்ட காகிதங்கள் சட்டமிட்டு மாட்டப்படும் அளவுக்கு மதிப்பு பெற்றுள்ளன.

மையமும் ஓரமும் மிக அதிகமாய் மாற்றப்பட்டுள்ள ஒரு விழா இந்த பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படும் Valentine விழா. இந்த விழாவுக்கான ஒரு மையம் இந்த விழா எழுந்த சூழல். இதன் வரலாறு. இந்த வரலாறு நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும், ஒரு முறை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
உரோமையப் பேரரசில் பிப்ரவரி 14 என்பது உரோமைய தேவர், தேவதைகளின் அரசியான ஜூனோவின் திருநாள். இந்தத் திருநாளைத் தொடர்ந்து, Lupercalia என்ற திருநாளும் வரும். இத்திருநாட்களைத் தொடரும் நாட்களில், இளம்பெண்களின் பெயர்களைச் சீட்டுக் குலுக்கி போட்டு, இளைஞர்கள் தெரிவு செய்வர். தெரிவு செய்யப்பட்ட இளம்பெண்ணும், இளைஞனும், நண்பர்கள் என்று அறிவிக்கப்படுவர். இப்படி ஆரம்பமாகும் நட்பு, பின்னர் காதலாகி, திருமண வாழ்வில் முடிவடையும்.
மூன்றாம் நூற்றாண்டில் இரண்டாம் Claudius மன்னனாய் இருந்தபோது, போருக்கு, படைக்கு ஆட்கள் சேர்ப்பது பெரும் கடினமாய் இருந்தது. இளைஞர்கள் தங்கள் காதலைத் துறந்து படைகளில் சேர விரும்பவில்லை. எனவே, Claudius இந்த பிப்ரவரி 14க்கான திருநாளையும், அதைத் தொடரும் காதல், திருமணம் இவற்றையும் தன் பேரரசில் முற்றிலும் தடை செய்தான். அந்த நேரத்தில் உரோமையில் இருந்த Valentine என்ற கத்தோலிக்க குரு அரசனுக்குத் தெரியாமல், பல இளையோருக்கு திருமணங்கள் நடத்தி வைத்தார். இதை அறிந்த அரசன், அந்த குருவைக் கைது செய்து, சிறையிலடைத்து, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினான். Valentine சிறையில் சித்திரவதைகள் அனுபவித்தபோது, சிறைக் காவலரின் பார்வையற்ற மகளைக் குணமாக்கினார் என்ற கதை ஒன்று உண்டு. 270ஆம் ஆண்டளவில், பிப்ரவரி 14 அன்று Valentine தலை வெட்டப்பட்டு உயிர் துறந்தார்.  
மனித வரலாற்றில் இதுவரை நடந்த எல்லா போர்களுமே (அவை எந்த காரணங்களுக்காய் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும்) வெறுப்பை, வெறியை வளர்த்து, வேதனைகளையே உருவாகியுள்ளன. இந்த வெறியை ஊட்டி வளர்க்க வீரர்கள் முன்வரவில்லை என்று Claudius காதலை, திருமணங்களைத் தடை செய்தான். அன்பைத் தடுத்தால் தானே, வெறியை உருவாக்க முடியும். அன்பைத் தடை செய்ய தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினான்.
வெறியை வளர்க்கும் இந்த அதிகாரத்தை எதிர்த்து, அன்பையும் காதலையும் வளர்க்க Valentine செய்தது அழகான ஒரு முயற்சி. அந்த முயற்சியையும் அவர் பகிரங்கமாய் செய்திருக்கலாம். அவர் நினைத்திருந்தால், அவரது 'அன்புப் படை'யில் ஆயிரக்கணக்கான இளையோரைச் சேர்த்து போராடியிருக்கலாம். (‘அன்புப் படை’ என்பதே முரண்பட்ட, ஒன்றோடொன்று பொருத்தாத சொற்றொடர்). Valentine போராட்டம், கலவரம் என்று மன்னனை எதிர்த்திருந்தால், அந்த கலவரங்களில் பல உயிர்கள் பலியாகியிருக்கும். அன்பின் பெயரால் இந்தக் கொலைகளைச் செய்ய விரும்பாத அந்த குரு அமைதியாக, அரசனுக்குத் தெரியாமல் அன்பை வளர்த்து வந்தார். அற்புதங்கள் நடத்தி வந்தார்.
மனித வரலாற்றில் வெறுப்பு, வெறி இவைகளே படை பலம், ஆட்பலம், அதிகார பலம் இவைகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்து, ஆரவாரமாய் வரலாற்றை ஆக்கிரமித்து வந்துள்ளன. அன்போ, அதைச் சார்ந்த அற்புதங்களோ அமைதியாக, ஆனால் ஆழமாக மனித வரலாற்றில் இடம் பிடித்துள்ளன.
படை பலத்தோடு ஆண்ட அரசன் Claudiusக்கு திருநாள் எதுவும் இல்லை. ஆனால், அன்பை வளர்த்த Valentineக்கு திருநாள் உண்டு. ஆனால், இந்த அழகான, ஆழமான பின்னணியை மறக்க வைக்கும் அளவுக்கு, Valentine's Day என்பதற்கு காதலர் தினம் என்ற வியாபாரப் பெயரைச் சூட்டி, வியாபார உலகம் அடையும் லாபத்திற்கு நம் இளையோர் எல்லை மீறி பலியாகி வருவது கசப்பான உண்மை. பணம் இல்லையெனில், பரிசு இல்லையெனில் அன்போ, காதலோ இல்லை என்று எண்ணும் அளவுக்கு இந்த நாள் பணக்காரத் திருநாளாகி விட்டது. இந்தத் விழா எவ்வளவு தூரம் வியாபாரமாகிவிட்டதென்பதற்கு இரு எடுத்துக்காட்டுகள். Valentine  சிறையில் இருந்த போது, அவரால் திருமணத்தில் இணைத்து வைக்கப்பட்ட பல இளையோர் சிறையில் அவரைச் சந்தித்து, மலர்களையும், தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல பரிசுகளையும் கொடுத்தனர் என்ற கதையும், Valentine தலை வெட்டப்படுவதற்கு முன், குணமான அந்தப் பெண்ணுக்குத் தன் கைப்பட எழுதிய ஒரு வாழ்த்தை அனுப்பினார் என்ற வேறொரு கதையும் உண்டு. இந்த அன்பு பரிமாற்றங்கள் இன்று வியாபாரமாகி, இந்த விழாவுக்கென பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மலர்கள் விற்கப்படுகின்றன. Valentine அந்தப் பெண்ணுக்கு “From your Valentine” - அதாவது, “உன்னுடைய Valentine இடமிருந்து” என்ற வார்த்தைகளை அவர் இறுதி வாழ்த்தாக எழுதி அனுப்பியதும் தற்போது வியாபாரமாகிவிட்டது.
பிப்ரவரி மாதத்தில், கிறிஸ்தவ பாரம்பரியத்தில் தவக்காலம் ஆரம்பமாகும். இந்த ஆண்டு தவக்காலம் வரும் பிப்ரவரி 17 திருநீற்று புதனோடு ஆரம்பமாக உள்ளது. வழக்கமாக, திருநீற்று புதனுக்கு முன்னால் ‘கார்னிவல்’ (Carnival) என்ற பெயரில் இன்னும் பல வரம்பு மீறும் கொண்டாட்டங்களை வியாபார உலகம் ஆரம்பித்துள்ளதும், அந்த கொண்டாட்டங்களில் இளையோர் ஈடுபடுவதும் கவலை தரும் மற்றொரு போக்கு...
பிப்ரவரி 14 என்று நினைக்கும் போது, உண்மை அன்பை, உண்மைக் காதலைக் கொண்டாடுவதற்கு பதில், அந்தப் புனிதமான உணர்வுகளுக்கு சாயம் பூசும் வியாபார உலகம் சொல்வது தான் உண்மை அன்பு, உண்மை காதல் என்று குழம்பிப் போயிருக்கும் நம் இளையோருக்கு கொஞ்சம் தெளிவு கிடைக்க இறை அருளை வேண்டுவோம்.

அன்பின் பலத்தை மட்டும் நம்பி வாழ்ந்தவர் இயேசு. அவர் தந்த அந்த அற்புதமான மலைப் பொழிவு இன்றைய நற்செய்தியில் நமக்குத் தரப்பட்டுள்ளது. அந்த நற்செய்திக்கு விளக்கங்கள் தேவையில்லை. பேறுபெற்றோர் என்று இயேசு மத்தேயு, லூக்கா என்ற இரு நற்செய்திகளிலும் பட்டியலிடும் புண்ணியங்கள் நிறை வாழ்வுக்கு வழிகாட்டும் விளக்குகள். மதம், சமயம் என்ற வட்டங்களைக் கடந்து, இயேசுவின் மழைப் பொழிவு பல உன்னத மனிதர்களுக்கு வழிகாட்டியுள்ளது.
இன்று நமக்குத் தரப்பட்டுள்ள லூக்கா நற்செய்தியில் தனி சிறப்பு உண்டு. இந்தப் பகுதியில், பேறு பெற்றோர் என்று இயேசு கூறும் ஆசீர் மொழிகளைத் தொடர்ந்து, எச்சரிக்கைகளையும் இயேசு நமக்கு விடுத்துள்ளார். அந்த நற்செய்தியோடு நம் சிந்தனைகளை, எண்ணங்களை நிறைவு செய்வோம். லூக்கா நற்செய்தி 6: 17, 20-26







All the contents on this site are copyrighted ©.