2010-02-13 16:16:52

இலங்கையில் போர்க் குற்றங்கள் என்று கருதப்படக்கூடிய விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் - நவநீதம்பிள்ளை


பிப்.13,2010 இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போரின் இறுதி கட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் என்று கருதப்படக்கூடிய விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை தான் தொடர்ந்து வலியுறுத்தப்போவதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் உயர் இயக்குனர் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில், உலகின் பல்வேறு நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் ஆர்வலர்களுக்கென நடைபெற்ற ஐந்தாவது மாநாட்டில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை இவ்வாறு கூறினார்.

இலங்கையை பொறுத்தவரை அங்கு போர்க்குற்றங்கள் நடந்திருக்கின்றன என்று தான் சந்தேகிப்பதாகவும், அங்கு இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவை சுதந்திரமானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாயும் அமையவேண்டும் என்றும் தான் வலியுறுத்தி வருவதாகவும் நவநீதம்பிள்ளை கூறினார்.

இவ்வெள்ளியன்று நிறைவடைந்த இந்த டப்ளின் கூட்டத்தில் இலங்கை உட்பட பல நாடுகளின் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

எனினும், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக எந்த ஒரு சர்வதேச விசாரணைகளுக்கும் இடம்தரப்போவதில்லை எனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.