2010-02-11 16:09:35

இன்றைய உலகிற்கு குருக்களின் பணி இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றது - திருப்பீட தூதரகத்தின் முதன்மைச் செயலர்


பிப்.11,2010 நற்செய்தியின் சாட்சிகளாக  தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள குருக்கள் அவர்களுக்கென  அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டில் சிறப்பான அழைப்பு பெற்றுள்ளனர் என்று இந்தியாவிற்கான திருப்பீட தூதரகத்தின் முதன்மைச் செயலர் பேரருட்திரு Chibuike Onayeaghala கூறினார். இவ்வியாழனன்று வேளாங்கண்ணியில் நிறைவு பெறும் அனைத்திந்திய குருக்கள் மாநாட்டில் பேசிய பேரருட்திரு Onayeaghala தற்போதைய உலகில் தேவ அழைத்தல் குறைந்து வந்த போதிலும், குருக்களுக்கு எதிரான எண்ணங்கள் பரவி வந்த போதிலும் இன்றைய உலகிற்கு குருக்களின் பணி இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றது என்று கூறினார். இந்த மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், கத்தோலிக்க குருக்களின் அர்ப்பண வாழ்வுக்கும் அவர்களது அயராத பணிக்கும் தன் வணக்கத்தைத் தெரிவித்து, தன் வாழ்வை இந்த நிலைக்கு கொண்டுவந்ததில் குருக்களுக்கு பெரும் பங்கு உள்ளதென குறிப்பிட்டார். குருக்கள் செய்து வரும் பணிக்கு, இந்தியாவிலுள்ள அனைத்து பொது நிலையினரின் நன்றிகளைத் திருத்தந்தைக்கு செலுத்துமாறு திரு பீட்டர் அல்போன்ஸ் கர்தினால் Claudio Hummes ஐக் கேட்டுக்கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.