2010-02-10 15:53:50

அமெரிக்க இவாஞ்சலிக்கல் லூத்தரன் கிறிஸ்தவசபைப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை


பிப்10,2010 சர்வதேச லூத்தரன் கிறிஸ்தவ சபை அமைப்பு மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு லூத்தரன் சபைக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையே தொடர்ந்து இடம் பெற்று வரும் உரையாடல்கள், இவ்விரு சபைகளும் இதுவரை எட்டியுள்ள உடன்பாடுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என்ற தனது நம்பிக்கையை தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அமெரிக்க இவாஞ்சலிக்கல் லூத்தரன் கிறிஸ்தவசபைப் பிரதிநிதிகளை இப்புதனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பின்னர் தொடங்கப்பட்ட இந்த உரையாடலில் இதுவரை அடைந்துள்ள பலன்கள் தொடரப்படுவதற்கு ஆன்மீக ரீதியிலான கிறிஸ்தவ ஒன்றிப்பு அவசியம் என்று கூறினார்.
இந்த ஆன்மீக ரீதியிலான கிறிஸ்தவ ஒன்றிப்பு, உறுதியான செபம், இன்னும் அருள் மற்றும் உண்மையின் ஊற்றாகிய கிறிஸ்துவில் மனமாறுதலை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
லூத்தரன் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையேயான ஒன்றிப்பு முயற்சிகளில் மறைந்த பாப்பிறை இரண்டாம் ஜான் பாலின் முக்கிய பங்கையும் சுட்டிக் காட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்..
மேலும், 18வது உலக நோயாளர் தினமான இவ்வியாழனன்று காலை 10.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் நோயாளிகளுக்குத் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை. புனித லூர்து அன்னை விழாவான பிப்ரவரி 11ம் தேதி திருச்சபையில் உலக நோயாளர் தினம் கடைபிடிக்கப்படுகின்றது.







All the contents on this site are copyrighted ©.