2010-02-09 16:05:52

வடஅயர்லாந்து குறித்த புதிய உடன்பாட்டிற்கு அயர்லாந்து ஆயர் பேரவைத் தலைவர் மகிழ்ச்சி


பிப்.09,2010 வடஅயர்லாந்து அரசு, தனது காவல்துறை மற்றும் நீதித்துறை விவகாரங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்கென இடம்பெற்றுள்ள புதிய உடன்பாட்டை வரவேற்றுள்ளார் அயர்லாந்து ஆயர் பேரவைத் தலைவர்.

வடஅயர்லாந்து மக்களின் அன்றாட வாழ்வை மிகவும் பாதித்து வருகிற விவகாரங்களை, குறிப்பாக அரசியல், பாதுகாப்பு மற்றும் நீதி சார்ந்த விவகாரங்களைக் கையாளுவதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று ஆர்மாஹ் பேராயர் கர்தினால் பிராடி தெரிவித்தார்.

வடஅயர்லாந்து அரசின் காவல்துறை மற்றும் நீதித்துறை விவகாரங்கள், இலண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்றத்திடமிருந்து பெல்பாஸ்ட்டிலுள்ள வடஅயர்லாந்து அவைக்கு மாற்றப்படுவதற்கான ஒப்பந்தம், இம்மாதம் ஐந்தாம் தேதி கொண்டுவரப்பட்டது.

1973ம் ஆண்டில் பிரிட்டன் அரசு, வடஅயர்லாந்து மீது நேரிடையான அதிகாரத்தைக் கொண்டு வந்த பின்னர் இத்தகைய உடன்பாடு ஏற்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும்.

இந்த உடன்பாடு குறித்து வடஅயர்லாந்து மக்கள் நன்கு சிந்தித்து அப்பகுதியில் களையப்பட வேண்டிய பிற பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுவார்கள் என்று தான் நம்புவதாகவும் கர்தினால் பிராடி கூறினார்.








All the contents on this site are copyrighted ©.