2010-02-09 16:04:07

கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டில் வன்முறையால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நிவாரண உதவிகள் முழுஅளவில் இன்னும் செய்யப்படவில்லை- ட்டாக்-புவனேஷ்வர் பேராயர்


பிப்.09,2010 கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டில் வன்முறையால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்யப்படும் என்று ஒரிசா மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் உறுதி அளித்திருக்கின்ற போதிலும் அவை முழுசெயல்வடிவம் பெறாமலே இருக்கின்றன என்று கட்டாக்-புவனேஷ்வர் பேராயர் இரபேல் சின்னத் கூறினார்.

கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவப் பழங்குடியினர் தங்களின் வீடுகளிலிருந்து முழுவதுமாக வெளியேறி 15 மாதங்கள் ஆகியும் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் காடுகளிலும் தெருவோரங்களிலும் தற்காலிக கூடாரங்களில் வாழ்கின்றனர் என்று நிருபர் கூட்டத்தில் அறிவித்தார் பேராயர் சின்னத்.

இந்த மக்கள் தினமும் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றும் உரைத்த பேராயர், இந்த மாதிரியான சூழல்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறந்துள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கந்தமால் மாவட்டத்தில் முழுமையான ஒப்புரவையும் நிலைத்த அமைதியையும் தாங்கள் விரும்புவதாகவும், மக்கள் எவ்வித அச்சமுமின்றி தங்கள் கிராமங்களுக்குத் திரும்பவும் தங்கள் வாழ்க்கையை மீண்டும் அமைக்கவும் வழிசெய்யும் விதத்தில் நீதி வெளிப்படையாக காட்டப்பட்டால் மட்டுமே இந்த ஒப்புரவையும் அமைதியையும் அடைய முடியும் எனவும் பேராயர் சின்னத் தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.