2010-02-08 16:31:46

கிறிஸ்தவ சபைகளுக்கிடையே பரஸ்பர மதிப்பு, நம்பிக்கை மற்றும் நட்புறவு வளர்ந்திருக்கின்றன - கர்தினால் காஸ்பர்


பிப்.08,2010 கடந்த பல ஆண்டுகளில் கிறிஸ்தவ சபைகளுக்கிடையே பரஸ்பர மதிப்பு, நம்பிக்கை மற்றும் நட்புறவு வளர்ந்திருப்பது கிறிஸ்தவ ஒன்றிப்பின் உண்மையான கனிகளாக அமைகின்றன, கிறிஸ்துவில் கிறிஸ்தவர்கள் அனைவரும் நம்மை சகோதர சகோதரிகளாகக் கண்டுணர்ந்துள்ளோம் என்று கர்தினால் வால்ட்டர் காஸ்பர் கூறினார்.

கிறிஸ்தவ சபைகளுக்கிடையேயான கடந்த நாற்பது வருட உரையாடல் பற்றிச் சீர்தூக்கிப் பார்க்கும் “Harvesting the Fruits” என்ற “கனிகளை அறுவடை செய்தல்” என்ற ஆய்வு நூல் குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் காஸ்பர் இவ்வாறு கூறினார்.

உரோமையில் இத்திங்களன்று தொடங்கியுள்ள இந்த மூன்று நாள் கருத்தரங்கில் பேசிய, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவரான கர்தினால் காஸ்பர், நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1910ம் ஆண்டு எடின்பர்கில் தூயஆவியின் தூண்டுதலால் நடைபெற்ற முதல் உலக மறைபோதகக் கருத்தரங்கு, கிறிஸ்தவ சபைகளுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டியதன் தேவையை உணர்ந்தது என்று கூறினார்.

ஆன்மீகரீதியிலான கிறிஸ்தவ ஒன்றிப்பு, உண்மையான கிறிஸ்தவ ஒன்றிப்பின் மையமாக இருக்கின்றது என்றும் உரைத்த கர்தினால், கிறிஸ்துவில் கண்களைப் பதித்து இவ்வொன்றிப்புக்கானப் பாதையில் முன்னோக்கிச் செல்வோம் என்று கிறிஸ்தவ சபைகளிடம் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.