2010-02-08 16:27:28

ஒருவர் உண்மையிலேயே இறைவனைச் சந்திக்கும் பொழுது அவருடைய இயலாமைகள் வெளிப்படுகின்றன - திருத்தந்தை


பிப்.08,2010 ஒருவர் உண்மையிலேயே இறைவனைச் சந்திக்கும் பொழுது அவருடைய இயலாமைகள் வெளிப்படுகின்றன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

ஒருவர் உண்மையிலேயே கடவுளைச் சந்திக்கும் போது, அது தாழ்ச்சிநிறைந்த அனுபவமாக இருக்கின்றது என்ற திருத்தந்தை, இத்தகைய இயலாமைகள் ஏற்றுக்கொள்ளப்படும் அதேவேளை, நம் ஆண்டவர் தம்மைப் பின்பற்றுமாறு பாவிகளைத் தொடர்ந்து அழைத்து வருகிறார் என்று உரைத்தார்.

இஞ்ஞாயிறு மூவேளை செபத்திற்காக வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு இறைவனின் அழைப்பு குறித்து விளக்கிய திருத்தந்தை, எசாயா, பேதுரு, பவுல் ஆகியோரை இறைவன் அழைத்த போது ஒரேமாதிரியான உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டன என்று கூறினார்.

இறைவன் இவர்களை அழைத்த போது இவர்கள் தங்களது தகுதியின்மையை வெளிப்படுத்தினார்கள் என்றும், இம்மூவரின் அனுபவங்களைப் பார்க்கும் போது கடவுளுடனான உண்மையான சந்திப்பில் மனிதன் தனது ஏழ்மை, இயலாமை, தனது வரையறைகள், தனது பாவம் ஆகிய அனைத்தையும் ஏற்கிறான் என்று அறிகிறோம் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

எனினும் இரக்கத்திலும் மன்னிப்பிலும் செல்வந்தராகிய ஆண்டவர் மனிதனின் வாழ்வை மாற்றி, தம்மைப் பின்பற்ற அழைக்கிறார் என்றார் அவர்.

எசாயா, பேதுரு, பவுல் ஆகியோர் வெளிப்படுத்தும் தாழ்ச்சியானது, இறையழைப்பு எனும் கொடையைப் பெற்றவர்கள் தங்களது சொந்தத் திறமைகளில் கவனம் செலுத்தாமல் ஆண்டவரின்மீதும் அவரது அளவுகடந்த இரக்கத்தின் மீதும் தங்கள் இலக்கை வைத்து மனமாற்றத்திலும் மகிழ்வோடு அவருக்காக அனைத்தையும் மகிழ்ச்சியோடு விட்டுவிடவும் அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை.

இந்தக் குருக்கள் ஆண்டில் விசுவாசிகள் அவர்களுக்காகச் செபிக்குமாறும் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, எசாயா, பேதுரு, பவுல் ஆகியோரிடம் விளங்கிய அதே தாழ்ச்சி மற்றும் விசுவாசத்தோடு ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் அழைப்புக்குத் தாராளமாகப் பதில் அளிக்குமாறு அனைத்து அருட்பணியாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.